வரலாறு படைத்த பெண்மணிகள்


வரலாறு படைத்த பெண்மணிகள்
x
தினத்தந்தி 9 March 2017 9:30 PM GMT (Updated: 9 March 2017 7:32 AM GMT)

இந்தியாவைச்சேர்ந்த புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், 5 முறை உலக குத்துச்சண்டை பெண்கள் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

மேரிகோம்

ந்தியாவைச்சேர்ந்த புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். இவர் 5 முறை உலக குத்துச்சண்டை பெண்கள் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இந்தியாவில் விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் உயர்ந்த விருதான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதை 2009– ம் ஆண்டு பெற்றார். அவரது சிறப்புகளை பார்ப்போம்.

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள கங்காத்தேரி கிராமத்தில் 1983–ம் ஆண்டு மார்ச் மாதம் 1– ந் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் மங்க்டி டான்பா கோம்–மங்க்டி ஆக்காம் கோம். மேரி கோமிற்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் சங்க்நெஜியாங் மேரி கோம் ஹமன்க்டி என்பதாகும். பின்னர் அதுவே சுருக்கமாக மேரி கோம் ஆனது.

மேரி கோம் சிறுவயதாக இருந்தபோது மணிப்பூர் மாநிலத்தைச்சேர்ந்த டிங்கோ சிங் என்பவர் குத்துச்சண்டையில் சிறந்து விளங்கினார். இதைப்பார்த்த அவருக்கு குத்துச்சண்டை மீது ஆர்வம் பிறந்தது. இதையடுத்து அவர் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு தன்னை வளர்த்துக்கொண்டார்.

2000–ம் ஆண்டு முதல் குத்துச்சண்டை பந்தயங்களில் கலந்துகொண்டார். போட்டியில் கலந்து கொண்ட சில ஆண்டுகளில் அதாவது 2002–ம் ஆண்டு விட்ச் கோப்பைக்கான பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் ஆனார். பின்னர் வீனஸ் கோப்பைக்கான சர்வதேச பெண்கள் குத்துச்சண்டை போட்டியிலும் அவர் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

இந்த காலகட்டத்தில் அவர் 2003 மற்றும் 2005–ம் ஆண்டுகளில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தையும் வென்றார். அப்போது அவர் ஆசிய கேடட் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனை என்ற விருதையும் பெற்றார். இதையடுத்து தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் அவர் கலந்து கொண்டு சாம்பியன் பட்டங்களை வென்றார்.

இதையடுத்து 2003– ம் ஆண்டு அவருக்கு அர்ஜூனா விருதும், 2005– ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

அதன்பின்னர் அவர் திருமணம் செய்து கொண்டு குடும்பவாழ்க்கையில் ஈடுபட்டார். அவருக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. 2 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு அவர் மீண்டும் குத்துச்சண்டையில் தீவிரமாக ஈடுபட்டார். இதன் பலனாக 2008–ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் இவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். அந்த ஆண்டில் சீனாவில் நடைபெற்ற உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றார். இதன் மூலம் அவர் மெக்னிபிசியன்ட் மேரி (அற்புதமான மேரி) என்று அழைக்கப்பட்டார். பின்னர் சுருக்கமாக ‘மேரி கோம்’   என்று அழைக்கப்பட்டார்.

ஆரம்பகாலத்தில் 46 மற்றும் 48 கிலோ எடைப்பிரிவில் மேரிகோம் போட்டிகளில் கலந்து கொண்டார். 2012– ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அவர் 51 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டார். இந்தப்போட்டியில் அவர் தனது திறமையை அபாரமாக வெளிப்படுத்தி வெண்கலப்பதக்கம் பெற்றார்.

மேரிகோம் குத்துச்சண்டை விளையாட்டின் மூலம் சம்பாதித்த பணத்தைக்கொண்டு இம்பால் நகரில் மேரிகோம் குத்துச்சண்டை அகடமி என்ற பயிற்சிப்பள்ளி ஒன்றை 2000–ம் ஆண்டு தொடங்கினார். இதன் மூலம் குத்துச்சண்டை விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 2013–ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்ம பூ‌ஷண் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் டெல்லி மேல்சபையின் நியமன எம்.பி.யாகவும் இவர் உள்ளார். 24.4.2022 வரை இவரது பதவிக்காலமாகும்.

Next Story