அகில இந்திய கைப்பந்து: ஓ.என்.ஜி.சி. அணி கால்இறுதிக்கு தகுதி
சென்னையில் நடந்து வரும் அகில இந்திய கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் ஓ.என்.ஜி.சி. அணி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.
சென்னை,
அகில இந்திய கைப்பந்து
நெல்லை பிரண்ட்ஸ் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 44–வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. தினத்தந்தி, டிடி நெக்ஸ்ட் மற்றும் எஸ்.என்.ஜே. ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் 5 அணிகளும் பங்கேற்றுள்ளன. ஆண்கள் பிரிவில் லீக் முறையிலும், பெண்கள் பிரிவில் ரவுன்ட் ராபின் லீக் அடிப்படையிலும் ஆட்டங்கள் நடைபெறுகிறது.
இதில் 3–வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் ஓ.என்.ஜி.சி. (டேராடூன்) அணி 25–22, 26–28, 25–23, 25–16 என்ற செட் கணக்கில் வருமான வரி (சென்னை) அணியை தோற்கடித்தது. ‘பி’ பிரிவில் தொடர்ந்து 2–வது வெற்றியை பெற்ற ஓ.என்.ஜி.சி. அணி கால்இறுதிக்கு முன்னேறியது.
தென் மத்திய ரெயில்வே வெற்றிபெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தென் மத்திய ரெயில்வே அணி 25–22, 18–25, 26–28, 34–32, 16–14 என்ற செட் கணக்கில் போராடி மேற்கு ரெயில்வே அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. இந்த ஆட்டம் 85 நிமிடம் நீடித்தது.
முந்தைய நாளில் நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம். அணி (டி பிரிவு) 25–17, 25–23, 28–26 என்ற நேர்செட்டில் சுங்க இலாகா அணியை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது. மற்றொரு ஆட்டத்தில் வருமான வரி அணி 23–25, 25–23, 26–24, 21–25, 15–10 என்ற செட் கணக்கில் எஸ்.டி.ஏ.டி. அணியை தோற்கடித்தது.