துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 11 March 2017 11:00 PM GMT (Updated: 11 March 2017 7:23 PM GMT)

*இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டு, புதிய இயக்குனராக அனில் கும்பிளே நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

இது குறித்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாக கமிட்டி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இது நடந்தால், கும்பிளேயின் பயிற்சியாளர் பொறுப்பு முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் வசம் செல்ல வாய்ப்புள்ளது.

*ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் இடையே பொதுவான இடமான உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. பின்னர் அயர்லாந்து அணி ஆடிய போது, மழை குறுக்கிட்டதால் 11 ஓவர்களில் 111 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் அயர்லாந்தால் 11 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 93 ரன்களே எடுக்க முடிந்தது. சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 2 ஓவர்களில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதுடன் புதிய சாதனையும் படைத்தது. சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியாக பெற்ற 10–வது வெற்றி இதுவாகும். இந்த சாதனை பட்டியலில் இங்கிலாந்து, அயர்லாந்து தலா 8 வெற்றிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளன.

* தாய்க்கு காய் கராத்தே மற்றும் கோபுடோ பள்ளியின் 34–வது ஆண்டு விழா சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒக்கினாவாவில் நடந்த கின்னஸ் சாதனை கட்டா நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த கோபுடோ ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஸ்வேதா, கார்த்திக் சுதர்‌ஷன், அபிஜித் பிரகாஷ் ஆகியோருக்கும், தேசிய கோபுடோ போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. ஜப்பான் தூதரக ஆலோசகர் புகாவோ ஜூனிச்சி, வைஷ்ணவா கல்லூரி முதல்வர் எம்.வெங்கட்ரமணன், ஒய்.எம்.சி.ஏ.சமுதாய கல்லூரி முதல்வர் எஸ்.ராஜேஸ்வரி ஆகியோர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.


Next Story