அகில இந்திய கைப்பந்து கேரள போலீஸ் அணி ‘சாம்பியன்’


அகில இந்திய கைப்பந்து கேரள போலீஸ் அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 11 March 2017 10:30 PM GMT (Updated: 11 March 2017 7:26 PM GMT)

அகில இந்திய கைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் கேரள போலீஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை,

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் ‘தினத்தந்தி’, ‘டிடி நெக்ஸ்ட்’ மற்றும் எஸ்.என்.ஜே. ஆதரவுடன் 44–வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் 5–வது நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவு கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் தென் மத்திய ரெயில்வே அணி 25–21, 27–25, 20–25, 25–23 என்ற செட் கணக்கில் தெற்கு ரெயில்வே அணியை தோற்கடித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் சாய் (தலச்சேரி) அணி 25–21, 25–15, 21–25, 25–20 என்ற செட் கணக்கில் மேற்கு ரெயில்வே அணியை சாய்த்தது.

கேரள போலீஸ் சாம்பியன்

ரவுண்ட் ராபின் லீக் ஆட்டங்கள் முடிவில் பெண்கள் பிரிவில் 3 வெற்றி, ஒரு தோல்வி கண்ட கேரள போலீஸ் அணி (திருவனந்தபுரம்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சாய் அணி, தெற்கு ரெயில்வே (சென்னை), தென் மத்திய ரெயில்வே (செகந்திராபாத்) அணிகள் தலா 2 வெற்றி, 2 தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்றன. இருப்பினும் புள்ளி விகிதாச்சாரம் அடிப்படையில் சாய் அணி 2–வது இடத்தையும், தெற்கு ரெயில்வே அணி 3–வது இடத்தையும், தென் மத்திய ரெயில்வே அணி 4–வது இடத்தையும் பிடித்தன. ஒரு வெற்றி, 3 தோல்வி கண்ட மேற்கு ரெயில்வே (மும்பை) அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் தேவாரம் தலைமை தாங்கினார். எஸ்.என்.ஜெ.குழும சேர்மன் ஜெயமுருகன் முன்னிலை வகித்தார். வருமான வரி முதன்மை கமி‌ஷனர் ஆல்பர்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். முதலிடம் பிடித்த அணிக்கு எஸ்.என்.ஜெ. கோப்பையுடன் ரூ.75 ஆயிரமும், 2–வது இடம் பெற்ற அணிக்கு டி.எம்.பி. கோப்பையுடன் ரூ.50 ஆயிரமும், 3–வது இடம் பெற்ற அணிக்கு போஸ் கோப்பையுடன் ரூ.40 ஆயிரமும், 4–வது இடம் பெற்ற அணிக்கு ஏ.எல்.சி. கோப்பையுடன் ரூ.30 ஆயிரமும், கடைசி இடம் பெற்ற அணிக்கு ரூ.20 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

விழாவில் சுங்க இலாகா உதவி கமி‌ஷனர் ஜோஸ் வர்கீஸ், சான் மீடியா நிர்வாக இயக்குனர் அர்ஜூன் துரை, போஸ் பப்ளிக் பள்ளி தாளாளர் பீனா போஸ், மூகாம்பிகா நிறுவன நிர்வாக இயக்குனர் எம்.பி.செல்வகணேஷ், தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ரமேஷ்குமார், முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story