அகில இந்திய கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்


அகில இந்திய கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்
x
தினத்தந்தி 12 March 2017 10:00 PM GMT (Updated: 2017-03-13T00:44:33+05:30)

நெல்லை பிரண்ட்ஸ் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் ‘தினத்தந்தி’, ‘டிடி நெக்ஸ்ட்’ மற்றும் எஸ்.என்.ஜே. ஆதரவுடன் 44–வது பி.ஜான் நினைவு

சென்னை,

 அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. ஆண்கள் பிரிவில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை எஸ்.ஆர்.எம். அணி, ஓ.என்.ஜி.சி.யுடன் (டேராடூன்) மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய எஸ்.ஆர்.எம். அணி 25–18, 26–24, 25–18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி 21–25, 30–28, 25–22, 18–25, 15–11 என்ற செட் கணக்கில் போராடி ஐ.சி.எப். அணியை சாய்த்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் தேவாரம் தலைமை தாங்கினார். வருமானவரித்துறை முதன்மை ஆணையர் ஹர்ஷ் பிரகாஷ், டாக்டர் அஜித் போஸ், போலீஸ் ஐ.ஜி. டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினர். மகுடம் சூடிய எஸ்.ஆர்.எம். அணிக்கு டாக்டர் சிவந்தி தங்க கோப்பையுடன் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2–வது இடத்தை பிடித்த ஓ.என்.ஜி.சி.க்கு ரூ.75 ஆயிரமும், 3–வது இடத்தை பெற்ற ஐ.ஓ.பி. அணிக்கு ரூ.50 ஆயிரமும், 4–வது இடத்தை பெற்ற ஐ.சி.எப். அணிக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டது. அத்துடன் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட முத்துசாமி, ஜெரோம் வினித் (எஸ்.ஆர்.எம்.), வி.ஆர்.வைஷ்ணவ் (ஐ.ஓ.பி.) வினித்குமார் (ஓ.என்.ஜி.சி), பிரபாகரன் (ஐ.சி.எப்.) ஆகியோருக்கு சிவந்தி விருதுடன் தலா ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசு அளிக்கப்பட்டது.

விழாவில் தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், விருதுநகர் மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் துரைசிங், சேலம் மாவட்ட செயலாளர் சண்முகம், முன்னாள் வீரர்கள் ஜெகதீசன், தினகரன், ரோமா குரூப் நிர்வாக இயக்குனர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story