இந்திய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து கரோலினா மரினை சந்திக்கிறார்


இந்திய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து கரோலினா மரினை சந்திக்கிறார்
x
தினத்தந்தி 1 April 2017 10:45 PM GMT (Updated: 1 April 2017 8:21 PM GMT)

இந்திய ஓபன் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை சந்திக்கிறார்.

புதுடெல்லி,

மொத்தம் ரூ.2 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக தர வரிசையில் 5–வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தர வரிசையில் 4–வது இடத்தில் உள்ள தென்கொரிய வீராங்கனை சங் ஜி ஹியுனை எதிர்கொண்டார். முதல் 2 செட்டில் இருவரும் மாறி, மாறி புள்ளி குவித்ததால் ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருந்தது.

இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால் வெற்றி யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 3–வது செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆக்ரோ‌ஷமாக செயல்பட்ட சிந்து கடைசி செட்டில் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்தார். 8–4, 11–4, 16–11 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்த சிந்து கடைசி வரை எதிராளியின் கையை ஓங்கவிடாமல் பார்த்து கொண்டார்.

சிந்து அபாரம்

76 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிந்து 21–18, 14–21, 21–14 என்ற செட் கணக்கில் சங் ஜி ஹியுனை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். சங் ஜி ஹியுனுக்கு எதிராக 11–வது முறையாக களம் கண்ட சிந்து பெற்ற 7–வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் 2 முறை உலக சாம்பியனும், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருமான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின், உலக தர வரிசையில் 2–வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

மரின்–சிந்து பலப்பரீட்சை

இதில், உலக தர வரிசையில் 3–வது இடத்தில் இருக்கும் கரோலினா மரின் 21–16, 21–14 என்ற நேர்செட்டில் அகானே யமாகுச்சியை எளிதில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். அகனே யமாகுச்சிக்கு எதிராக 7–வது ஆட்டத்தில் ஆடிய கரோலினா 4–வது வெற்றியை சுவைத்தார்.

இன்று நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் கரோலினா மரின்–சிந்து ஆகியோர் மோதுகிறார்கள். இருவரும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் கரோலினா மரின் 5 முறையும், சிந்து 3 தடவையும் வெற்றி கண்டுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் சோ டின் சென் (சீன தைபே)–விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) ஆகியோர் சந்திக்கின்றனர்.


Next Story