மலேசிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, சாய்னா தோல்வி


மலேசிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, சாய்னா தோல்வி
x
தினத்தந்தி 5 April 2017 11:15 PM GMT (Updated: 2017-04-06T01:05:38+05:30)

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்களில்

குஷிங்,

 இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.

சிந்து, சாய்னா தோல்வி

மலேசிய ஓபன் சீப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள குஷிங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 5–வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 13–வது இடத்தில் உள்ள சீன வீராங்கனை சென் யுபெய்யை சந்தித்தார். 68 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், கடந்த வாரம் நடந்த இந்திய ஓபன் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியவருமான சிந்து 21–18, 19–21, 17–21 என்ற செட் கணக்கில் சென் யுபெங்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 8–வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 2–ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். 56 நிமிடம் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சாய்னா 21–19, 13–21, 15–21 என்ற செட் கணக்கில் யமாகுச்சியிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். இதன் மூலம் இந்த போட்டி தொடரில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகளின் சவால் முடிவுக்கு வந்தது.

அஜய் ஜெயராம் வெற்றி

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 21–11, 21–8 என்ற நேர்செட்டில் சீனாவின் குயாவ் பின்னை தோற்கடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஒற்றையர் ஆட்டத்தில் உலக தர வரிசையில் 33–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சாய் பிரனீத் 21–18, 19–21, 18–21 என்ற செட் கணக்கில் 5 முறை உலக சாம்பியனான லின் டானிடம் (சீனா) போராடி தோல்வி கண்டார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மனு அட்ரி–சுமீத் ரெட்டி ஜோடி தோல்வி கண்டு நடையை கட்டியது.


Next Story