இந்திய கைப்பந்து சம்மேளன புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட கோர்ட்டு அனுமதி


இந்திய கைப்பந்து சம்மேளன புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 29 April 2017 8:39 PM GMT (Updated: 29 April 2017 8:39 PM GMT)

இந்திய கைப்பந்து சம்மேளன புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட டெல்லி ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

இந்திய கைப்பந்து சம்மேளன புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட டெல்லி ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

நிர்வாகிகள் பட்டியல் வெளியிட அனுமதி

இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் 2013–2017–ம் ஆண்டுக்கான தலைவராக அவ்தேஷ் குமாரும், பொதுச்செயலாளராக ராம் அவ்தார்சிங் ஜாக்கரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய கைப்பந்து லீக் போட்டியை நடத்துவதில் இரு தரப்பினருக்கும் இடையே எழுந்த மோதல் காரணமாக 2016–ம் ஆண்டு ஏப்ரல் 11–ந் தேதி இந்திய கைப்பந்து சம்மேளனத்துக்கு நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட இருந்ததால், தேர்தல் முடிவை சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. இதன்படி தேர்தலை நடத்திய சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் நிர்வாகிகள் பட்டியலை டெல்லி ஐகோர்ட்டில் சமர்ப்பித்தார். கடந்த ஒரு ஆண்டாக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் பதவி தவிர மற்ற அனைத்து பதவிகளுக்கும் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட டெல்லி ஐகோர்ட்டு கடந்த 27–ந் தேதி அனுமதி அளித்துள்ளது. அத்துடன் வழக்கு விசாரணையை ஆகஸ்டு 31–ந் தேதிக்கு தள்ளி வைத்தது. தலைவர் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.

இந்தியன் வாலிபால் லீக்

இதையொட்டி இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ராம் அவ்தார்சிங் ஜாக்கர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின் படி புதிய நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் எங்களிடம் அளித்துள்ளார். இதன்படி பொதுச்செயலாளராக நானும் (ராம் அவ்தார்சிங் ஜாக்கர்), செயல் துணைதலைவராக ராஜ்குமாரும், பொருளாளராக சேகர் போஸ்சும், மற்றும் துணைதலைவர்களாக 9 பேரும், அசோசியேட் செயலாளராக 2 பேரும், இணைசெயலாளராக 7 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகிகள் அனைவரும் இணைந்து தேசிய கைப்பந்து போட்டிகள் நடத்தும் பணிகளை தீவிரப்படுத்துவோம். இந்தியன் வாலிபால் லீக் போட்டியை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கைப்பந்து அணி பதக்கம் வெல்வதையும், ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய கைப்பந்து அணி தகுதி பெறுவதையும் இலக்காக கொண்டு செயல்படுவோம்.

இவ்வாறு ராம்அவ்தார் சிங் ஜாக்கர் கூறினார். அப்போது இந்திய கைப்பந்து சம்மேளன இணைசெயலாளர் நடராஜன் உடன் இருந்தார்.


Next Story