துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 10 May 2017 12:49 AM IST (Updated: 10 May 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடந்தது.

* பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடந்தது. இந்த போட்டியின் போது சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய ‌ஷர்ஜீல்கான், காலித் லத்தீப், நசிர் ஜாம்ஷெட், ஷாகைப் ஹசன், முகமது இர்பான் ஆகியோரை இடைநீக்கம் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் ஆல்–ரவுண்டர் முகமது நவாஸ்க்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மன் அனுப்பி உள்ளது. அந்த சம்மனில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையினர் முன்பு விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ராணி தலைமையிலான இந்திய பெண்கள் ஆக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா–நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் வருகிற 14–ந் தேதி நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ராணி கருத்து தெரிவிக்கையில், ‘இன்னும் 3 மாதங்களில் நடக்க இருக்கும் உலக லீக் அரைஇறுதி போட்டிக்கு தயாராக இந்த போட்டி தொடர் பயனுள்ளதாக இருக்கும். உயர்ந்த தர வரிசையில் உள்ள நியூசிலாந்து அணியுடன் ஆடுவது நமது ஆட்ட தரத்தை மேலும் உயர்த்துவதுடன், நமது பலவீனத்தை புரிந்து கொள்ளவும் உதவும்’ என்றார்.

* சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 1–ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான பேர்ஸ்டோவ்க்கு ஆடும் அணியில் இடம் அளிப்பது கடினம் என்று அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘தற்போதைய சூழ்நிலையில் அணியில் விளையாட இடம் கிடைக்கும் என்று பேர்ஸ்டோவ் எதிர்பார்க்க முடியாது. எங்கள் அணியில் வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ், ஜோஸ்பட்லர் ஆகியோர் அணிக்கு திரும்புவதால் பேர்ஸ்டோவ்க்கு இடம் அளிப்பது முடியாத காரியமாகும்’ என்று தெரிவித்தார். உள்ளூர் ஆட்டம் மற்றும் டெஸ்ட் போட்டியில் பேர்ஸ்டோவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* அமெரிக்காவில் மிகவும் பிரபலமான தேசிய கூடைப்பந்து சங்கம் சார்பில் டெல்லியை அடுத்த நொய்டாவில் கூடைப்பந்து அகாடமி தொடங்கப்பட்டு இருக்கிறது. தேசிய கூடைப்பந்து சங்கம் சார்பில் இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் முதல் அகாடமி இதுவாகும். இந்த அகாடமிக்கு சிறந்த இளம் வீரர்–வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச தரம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்படும் என்றும் இதன் மூலம் இந்திய கூடைப்பந்தின் தரம் மேலும் உயரும் என்றும் அகாடமி நிர்வாகிகள் உறுதி அளித்துள்ளனர்.

* தென்ஆப்பிரிக்க தேசிய அணிகளில் கறுப்பர் இனத்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையை சரியாக கடைப்பிடிக்காததால் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் மற்றும் ரக்பி, நெட்பால் சங்கம் ஆகியவற்றுக்கு தென்ஆப்பிரிக்க அரசு கடந்த ஆண்டில் சர்வதேச போட்டிகளை நடத்த தடை விதித்தது. தற்போது இந்த தடை விலக்கி கொள்ளப்பட்டு இருக்கிறது என்று தென்ஆப்பிரிக்க விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.


Next Story