புரோ கபடி லீக் போட்டியில் தமிழ்நாடு உள்பட 4 அணிகள் புதிதாக சேர்ப்பு


புரோ கபடி லீக் போட்டியில் தமிழ்நாடு உள்பட 4 அணிகள் புதிதாக சேர்ப்பு
x
தினத்தந்தி 12 May 2017 8:50 PM GMT (Updated: 2017-05-13T02:20:18+05:30)

புரோ கபடி லீக் போட்டியில் தமிழ்நாடு உள்பட 4 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

புரோ கபடி லீக் போட்டியில் தமிழ்நாடு உள்பட 4 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

புரோ கபடி லீக்

புரோ கபடி லீக் போட்டி 2014–ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு நிலவி வருகிறது. இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரட்ஸ், புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பை ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு மோதி வருகின்றன.

கடந்த ஆண்டில் மட்டும் இந்த போட்டி 2 முறை (ஜனவரி, ஜூன்) நடத்தப்பட்டது. இதில் இரண்டு தடவையும் பாட்னா பைரட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தொடக்க லீக் (2014) போட்டி தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், 2015–ம் ஆண்டு போட்டியில் யு மும்பை அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன.

புதிதாக 4 அணிகள் சேர்ப்பு

ஆண்டுக்கு இரண்டு முறை போட்டியை நடத்துவதை மாற்ற வேண்டும் என்றும், போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக 4 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய அணிக்கான ஒப்பந்தத்தை பெற பல நிறுவனங்கள் போட்டி, போட்டு டெண்டர் மூலம் விண்ணப்பித்து இருந்தன. டெண்டர் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சென்னையை (தமிழ்நாடு) தலைமையிடமாக கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், தொழில் அதிபர் என்.பிரசாத் ஆகியோர் இணைந்து வாங்கி இருக்கின்றனர். ஆமதாபாத் (குஜராத்) அணியை அதானி குழுமமும், லக்னோ (உத்தரபிரதேசம்) அணியை ஜி.எம்.ஆர். குழுமமும், அரியானா அணியை ஜெ.எஸ்.டபிள்யூ. குழுமமும் வாங்கி இருக்கின்றன. புதிய அணிகளின் பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

12 இடங்களில்...

இந்த ஆண்டுக்கான 5–வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை முதல் அக்டோபர் வரை 13 வாரங்கள் நடைபெறும். 12 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி 12 இடங்களில் அரங்கேறும் என்று போட்டியை நடத்தும் ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் உதய்சங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story