உலகமே போட்டியில் தான் சுழல்கிறது..! –நிக்கிலேஷ் தபானி


உலகமே போட்டியில் தான் சுழல்கிறது..! –நிக்கிலேஷ் தபானி
x
தினத்தந்தி 10 Jun 2017 6:06 AM GMT (Updated: 10 Jun 2017 6:05 AM GMT)

ஸ்கேட்டிங் விளையாட்டின் மின்னல் வேக வீரர், நிக்கிலேஷ் தபானி. நாக்பூரை சேர்ந்த நிக்கிலேஷ், உலகளவிலான போட்டிகளில் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.

ஸ்கேட்டிங் விளையாட்டின் மின்னல் வேக வீரர், நிக்கிலேஷ் தபானி. நாக்பூரை சேர்ந்த நிக்கிலேஷ், உலகளவிலான போட்டிகளில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். துபாயில் நடைபெற்ற சர்வதேச போட்டியில், 300 மீட்டர் மற்றும் 500 மீட்டர் பந்தயங்களில் மின்னல் வேகத்தில் சுழன்று உலக சாதனையுடன் வெற்றிவாகை சூடினார். அதேவேகத்தில் பல சர்வதேச போட்டிகளை வென்றவர், இன்று மாடலிங் துறையிலும் அசத்தி வருகிறார். பிசியான பயிற்சிக்கு பிறகு, அமைதியான மாடலாக மாறிவிடுகிறார். இருமுகம் காட்டும் நிக்கிலேஷிடம் பேசுவோம்...

ஸ்கேட்டிங் வீரரான நீங்கள் எப்படி மாடலிங்கில் நுழைந்தீர்கள்?


உலகமே போட்டியில் தான் சுழல்கிறது. ஏதாவது ஒருதுறையில் நாம் ஜொலித்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் நாம் இருப்பதை மறந்துவிடுவார்கள். சுழல் சக்கரத்தில் 300 மீட்டர், 500 மீட்டர் பந்தயத்தில் சீறிபாய்ந்து உலகின் மின்னல் வீரர் என்ற பட்டத்தை பெற்றுவிட்டேன். அடுத்ததாக ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த என்னை... உலக மீடியாக்கள் உசுப்பேற்றிவிட்டன. அதுதான் மாடலிங் துறை. மாடல் போன்று இருக்கிறார்; ஸ்டைல் காட்டுகிறார்... என்று எழுதி என்னை மாடலிங் துறையில்  தள்ளிவிட்டனர். அதிலும் நான் நீந்தி கரை சேர்ந்திருக்கிறேன். வழக்கமான பயிற்சிகளுடன், மாடலிங் வேலைகளையும் செய்து வருகிறேன்.

மாடலிங் துறைக்கும், விளையாட்டு துறைக்கும்  என்ன வித்தியாசம்?

விளையாட்டு துறையில் வெயிலில் தான் பயிற்சி செய்யவேண்டும். ஆனால் மாடலிங் துறையில் வெயில் படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் முகம் பொலிவை இழந்துவிடும்.

* உங்களுடைய லட்சியம்?


ஸ்கேட்டிங் விளையாட்டின் எல்லா பிரிவுகளிலும் மின்னல் வேக வீரர் என்ற பட்டத்தை பெறவேண்டும். அதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

 ஸ்கேட்டிங் விளையாட்டில் என்ன சுவாரசியம் இருக்கிறது?


சைக்கிள் பந்தயம், மோட்டார் பந்தயங்களை போன்று இதுவும் ஒரு பந்தயம். அதில் பயன்படுத்த இருக்கும் ஸ்கேட்டிங் வண்டியை சரிவர புரிந்து வைத்திருக்க வேண்டும். சக்கர சுழற்சியையும், உடலின் இயக்க திசையையும், எதிர்காற்றின் வேகத்தையும் சரிவர கணக்கிட்டால் மட்டுமே மின்னல் வேகத்தில் சுழல முடியும். இந்த புரிதலே சுவாரசியம் தான். இயற்கையையும், உடலையும், அறிவியலையும் புரிந்துகொள்வது எவ்வளவு சுவாரசியம் என்பதை சுழல் சக்கர விளையாட்டில் தான் தெரிந்துகொள்ள முடியும்.

உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு?


கிரிக்கெட் விளையாட்டை விரும்பி பார்ப்பேன். அதேசமயம் ஆக்கியும் பிடிக்கும். கால்பந்து, கேரம், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளையும் விளையாடி மகிழ்கிறேன். கிட்டதட்ட குழு விளையாட்டும் பிடிக்கும். தனிநபர் விளையாட்டும் பிடிக்கும். அதனால் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறேன்.

மின்னல்வேக யுக்தியை இந்திய வீரர்களுக்கு கற்றுக்கொடுக்கிறீர்களா?


முறையாக கற்றுக்கொண்டால் மட்டுமே அதை முறைப்படி கற்றுக்கொடுக்க முடியும். அதனால் மின்னல்வேக யுக்திகளை கற்றுக்கொண்டிருக்கிறேன்.

கற்றுக் கொண்டதும், கற்றுக்கொடுப்பேன்.

Next Story