இந்தோனேஷிய பேட்மிண்டன்: ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தினார், பிரனாய்


இந்தோனேஷிய பேட்மிண்டன்: ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தினார், பிரனாய்
x
தினத்தந்தி 16 Jun 2017 10:30 PM GMT (Updated: 16 Jun 2017 9:20 PM GMT)

இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டனில் இந்திய இளம் வீரர் பிரனாய், ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்கை வீழ்த்தினார்.

ஜகர்தா,

இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தா நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி மங்கைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து 2-வது சுற்றுடன் வெளியேறிய நிலையில், ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் பிரனாய், ஸ்ரீகாந்த் தொடர்ந்து அசத்தி வருகிறார்கள்.

2-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் மலேசியாவின் லீ சோங் வெய்க்கு அதிர்ச்சி அளித்த பிரனாய் நேற்று கால்இறுதியில் ஒலிம்பிக் சாம்பியனும், இரட்டை உலக சாம்பியனுமான சீனாவின் சென் லாங்கை எதிர்கொண்டார்.

பலம் வாய்ந்த எதிராளி என்ற போதிலும் அதை பொருட்படுத்தாமல் மனஉறுதியுடன் போராடிய பிரனாய் 21-18, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் சென் லாங்கை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 1 மணி 15 நிமிடங்கள் நடந்தது. உலக தரவரிசையில் 25-வது இடம் வகிக்கும் பிரனாய் தகுதி சுற்றின் மூலமே பிரதான சுற்றுக்குள் வந்தார். சென் லாங்கை அவர் வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அவருக்கு எதிராக ஆடியிருந்த 3 ஆட்டங்களிலும் தோல்வியே கண்டு இருந்தார்.

பிரனாய் கருத்து

சூப்பர் சீரிஸ் போட்டியில் முதல் முறையாக அரைஇறுதியை எட்டிய பிரனாய் வெற்றி மகிழ்ச்சியில் கூறுகையில், ‘இந்த ஆட்டம் மிகவும் கடினமாக இருந்தது. நன்றாக ஆட முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டேன். கடைசிவரை தாக்குப்பிடித்து விளையாடியதற்கு சிறப்பான உடல்தகுதியே காரணம் என்று நினைக்கிறேன்.

இந்திய ஓபன், ஆசிய பேட்மிண்டனுக்கு பிறகு புதிய பயிற்சியாளர் முல்யோ ஹன்டோயாவின் கீழ் உடல்தகுதியை பேணுவதில் கடினமாக உழைக்கிறேன். அதனால் பயிற்சி முறைகளையும் மாற்றி விட்டேன். முன்பு குறுகிய நேரம் பயிற்சி செய்வேன். இப்போது 4 மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுகிறேன்’ என்றார். பிரனாய் அடுத்து ஜப்பானின் காஜூமாசா சகாயுடன் இன்று மோதுகிறார்.

ஸ்ரீகாந்த் அபாரம்

மற்றொரு இந்தியர் ஸ்ரீகாந்துக்கும் இது தித்திப்பான நாளாக அமைந்தது. அவர் 21-15, 21-14 என்ற நேர் செட்டில் சீனத்தைபே வீரர் ஷூ வெய் வாங்கை எளிதில் வெளியேற்றினார். ஸ்ரீகாந்த் அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் தென்கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்கொள்கிறார். 

Next Story