இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் பந்தை திருப்பி அடிக்கிறார்.


இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் பந்தை திருப்பி அடிக்கிறார்.
x
தினத்தந்தி 17 Jun 2017 11:00 PM GMT (Updated: 2017-06-18T00:44:33+05:30)

இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஜகர்தா,

மொத்தம் ரூ.6½ கோடி பரிசுத் தொகைக்கான இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ்பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் உலக தர வரிசையில் 25-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரனாய், 47-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீரர் கசுமசா சகாயை சந்தித்தார்.

1 மணி 16 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் பிரனாய் முதல் செட்டை 21-17 என்ற கணக்கில் தனதாக்கினார். அதன் பின்னர் சுதாரித்து விளையாடி சரிவில் இருந்து மீண்ட ஜப்பான் வீரர் கசுமசா சகாய் அடுத்த 2 செட்களையும் 28-26, 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி பிரனாய்க்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான மலேசியாவின் லீ சோங் வெய், கால்இறுதியில் ஒலிம்பிக் சாம்பியனும், இரட்டை உலக சாம்பியனுமான சீனாவின் சென் லாங் ஆகியோரை சாய்த்து இருந்த பிரனாய் இறுதிப்போட்டியை எட்டுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் மயிரிழையில் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தார்.

இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த்

மற்றொரு அரைஇறுதியில் உலக தரவரிசையில் 22-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், நம்பர் ஒன் வீரரான தென்கொரியாவின் சன் வான் ஹோவை சந்தித்தார்.

1 மணி 12 நிமிடம் விறுவிறுப்பாக நடந்த இந்த மோதலில் ஸ்ரீகாந்த் 21-15, 14-21, 24-22 என்ற செட் கணக்கில் சன் வான் ஹோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். சூப்பர் சீரிஸ் போட்டியில் ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்குள் நுழைவது இது 4-வது முறையாகும்.

இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், ஜப்பானை சேர்ந்த தகுதி சுற்று வீரரான கசுமசா சகாயை எதிர்கொள்கிறார்.

Next Story