ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் கால்இறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், வீராங்கனைகள் சிந்து, சாய்னா ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.
சிட்னி,
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், வீராங்கனைகள் சிந்து, சாய்னா ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.
கால்இறுதியில் ஸ்ரீகாந்த்ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் சமீபத்தில் நடந்த இந்தோனேஷிய ஓபன் பட்டத்தை வென்ற இந்திய வீரரான ஸ்ரீகாந்த், உலகின் நம்பர் ஒன் வீரரான சன் வான் ஹோவை (தென்கொரியா) சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் முதல் செட்டை இழந்தாலும், அடுத்த 2 செட்களில் அபாரமாக செயல்பட்டு சரிவில் இருந்து மீண்டு வெற்றியை தனதாக்கினார். 57 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 15–21, 21–13, 21–13 என்ற செட் கணக்கில் சன் வான் ஹோவை சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
சாய் பிரனீத்துடன் மோதல்மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21–15, 18–21, 21–13 என்ற செட் கணக்கில் 25–வது இடத்தில் இருக்கும் சீன வீரர் ஹுயாங் யுசியாங்கை தோற்கடித்து கால்இறுதிக்குள் கால் பதித்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 4 நிமிடம் தேவைப்பட்டது.
இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த்–சாய் பிரனீத் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இதுவரை இருவரும் 6 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் சாய் பிரனீத் 5 முறை வெற்றியும், ஒரு முறை தோல்வியும் சந்தித்துள்ளார்.
சிந்து, சாய்னா முன்னேற்றம்பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 21–13, 21–18 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை சென் ஸ்சியாவ்சின்னை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 46 நிமிடம் மட்டுமே தேவைப்பட்டது.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் 21–15, 20–22, 21–14 என்ற செட் கணக்கில் மலேசியாவின் சோனியா செயாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 1 மணி 2 நிமிடம் நீடித்தது.
அஸ்வினி ஜோடி தோல்விபெண்கள் இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் அஸ்வினி–சிக்கி ரெட்டி ஜோடி 21–18, 18–21, 13–21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஷிகோ தனகா–கோஹரு யோனெமோடா இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் சத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி–சிராக் ஷெட்டி ஜோடி 16–21, 18–21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் சென் ஹூங் லிங்–வாங் சி லின் இணையிடம் தோல்வி கண்டு நடையை கட்டியது.
தர வரிசையில் சாய்னா, சிந்து சறுக்கல்இதற்கிடையில் உலக பேட்மிண்டன் வீரர்–வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் இந்தோனேஷிய ஓபன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 11 இடங்கள் முன்னேறி 11–வது இடத்தை பிடித்துள்ளார். இந்தோனேஷிய ஓபனில் உலக சாம்பியன் சென் லாங்கை வீழ்த்திய இந்திய வீரர் பிரனாய் 4 இடங்கள் ஏற்றம் கண்டு 21–வது இடம் பெற்றுள்ளார். இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், சாய் பிரனீத் முறையே ஒரு இடம் சறுக்கி 15–வது மற்றும் 16–வது இடத்தை பிடித்துள்ளனர். பெண்கள் ஒற்றையர் தர வரிசையில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் ஒரு இடம் சரிந்து முறையே 4–வது மற்றும் 16–வது இடத்தை பெற்றுள்ளனர்.