பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சம் பரிசு; சந்திரபாபு நாயுடு வழங்கினார்


பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சம் பரிசு; சந்திரபாபு நாயுடு வழங்கினார்
x
தினத்தந்தி 29 Jun 2017 10:15 PM GMT (Updated: 29 Jun 2017 8:48 PM GMT)

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சத்தை பரிசாக ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார்.

விஜயவாடா,

சமீபத்தில் நடந்த இந்தோனேஷிய ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற ஸ்ரீகாந்த் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் ஆவார்.

அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்று அசத்திய ஸ்ரீகாந்துக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் பாராட்டு விழா விஜயவாடாவில் நேற்று நடந்தது. விழாவில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சத்துக்கான செக்கை வழங்கினார். அத்துடன் மாநில அரசின் குரூப்–1 அதிகாரி பதவி வழங்கவும் தயார் என்று அறிவித்தார். மேலும் அவர் வெளிநாட்டில் பயிற்சி பெற விரும்பினால் அதற்கான நிதி உதவியும் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். ஸ்ரீகாந்தின் பயிற்சியாளர் கோபிசந்துக்கு ரூ.15 லட்சத்தை பரிசாக வழங்கினார்.

பரிசை பெற்ற ஸ்ரீகாந்த் விழாவில் பேசுகையில், ‘பயிற்சியாளர் கோபிசந்துக்கு பேட்மிண்டன் அகாடமி அமைக்க முதல்–மந்திரி நிலம் வழங்கியது ஒருங்கிணைந்த ஆந்திராவில் பேட்மிண்டன் ஆட்டத்தின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கிறது. நான் எப்பொழுதும் ஆந்திர மாநிலத்துக்காகவே விளையாடி வருகிறேன். அது வருங்காலத்திலும் தொடரும்’ என்று தெரிவித்தார்.

விழா தொடங்குவதற்கு முன்பு மேடையில் சந்திரபாபு நாயுடு, ஸ்ரீகாந்துடன் சில நிமிடங்கள் பேட்மிண்டன் விளையாடினார். ஸ்ரீகாந்த், முதல்–மந்திரிக்கு பேட்மிண்டன் மட்டையை பரிசாக வழங்கினார்.

இதற்கிடையில் உலக பேட்மிண்டன் வீரர்–வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை உலக பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 11–வது இடத்தில் இருந்து 3 இடங்கள் முன்னேறி 8–வது இடத்தை பிடித்துள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்த 24 வயதான ஸ்ரீகாந்த் கடந்த 10 மாதங்களில் முதல்முறையாக தர வரிசையில் ‘டாப்–10’ இடத்துக்குள் வந்து இருக்கிறார். கடைசியாக 2016–ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் ‘டாப்–10’ இடத்துக்குள் இருந்த ஸ்ரீகாந்த், அதன் பிறகு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் கால்இறுதி வரை முன்னேறினார். 2015–ம் ஆண்டில் ஜூன் மாதத்தில் 3–வது இடத்தை பெற்றதே அவரது அதிகபட்ச தரவரிசையாகும்.

மற்ற இந்திய வீரர்களான சாய் பிரனீத் 15–வது இடத்தையும், அஜய் ஜெயராம் 16–வது இடத்தையும், பிரனாய் 2 இடம் சரிந்து 23–வது இடத்தையும் பெற்றுள்ளனர். பெண்கள் ஒற்றையர் தர வரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் சறுக்கி 5–வது இடம் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஒரு இடம் ஏற்றம் கண்டு 15–வது இடம் பெற்றுள்ளார்.


Next Story