துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 18 July 2017 8:30 PM GMT (Updated: 18 July 2017 8:30 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு மராட்டிய மாநிலம் நாக்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது.

கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் வீட்டில் கொள்ளை

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு மராட்டிய மாநிலம் நாக்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு இவரது குடும்பத்தினர் வெளியில் சென்று விட்டு திரும்பி வந்த போது, வீட்டின் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 செல்போன்கள் மாயமாகி இருந்தன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கீழ்தளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. அதில் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

பயிற்சியாளர் பதவி: மவுனம் காக்கும் ஷேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் முன்னாள் வீரர் ஷேவாக்கும் இருந்தார். ஆனால் அவரை ஓரங்கட்டிய ரவிசாஸ்திரி புதிய பயிற்சியாளராகி விட்டார். இந்த நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷேவாக்கிடம், தலைமை பயிற்சியாளர் தேர்வு குறித்தும், இந்திய அணிக்கு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பது குறித்தும் நிருபர்கள் சரமாரி கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளிப்பதை தவிர்த்த ஷேவாக், ‘நிகழ்ச்சி சம்பந்தமான கேள்விகளை மட்டும் கேளுங்கள் பதில் சொல்கிறேன்’ என்று கூறி நழுவினார்.

காலிசுடன் ஒப்பிட்டு பிலாண்டருக்கு பாராட்டு

நாட்டிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி 340 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஆல்–ரவுண்டராக ஜொலித்த தென்ஆப்பிரிக்க ஆல்–ரவுண்டர் வெரோன் பிலாண்டர் (54, 42 ரன் மற்றும் 5 விக்கெட்) ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், ‘பிலாண்டர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும் போது, தென்ஆப்பிரிக்க அணிக்கு புதிய காலிஸ் உருவெடுப்பது போல் தெரிகிறது, அவரது ஆட்ட நுணுக்கம் காலிஸ் போன்றே அப்படியே இருக்கிறது’ என்றார்.

முகமது ‌ஷமியுடன் தகராறு செய்த வாலிபர்கள் கைது

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். தனது காரை குடியிருப்பில் நிறுத்த முயன்ற போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் இடையூறு செய்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபருக்கு ஆதரவாக மேலும் 2 பேர் வந்ததால் கைகலப்பானது. இது குறித்து முகமது ‌ஷமி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ‌ஷமியுடன் தகராறு செய்த 3 வாலிபர்களையும் கைது செய்தனர். இவர்கள் அங்கு சலூன்கடை நடத்தி வருவது விசாரணையில் தெரிய வந்தது.


Next Story
  • chat