அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் இந்திய வீரர் பிரனாய் ‘சாம்பியன்’


அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் இந்திய வீரர் பிரனாய் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 24 July 2017 11:15 PM GMT (Updated: 24 July 2017 7:32 PM GMT)

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரனாய் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.

அனாஹிம்,

அமெரிக்க ஓபன் கிராண்ட்பிரி கோல்டு பேட்மிண்டன் போட்டி அனாஹிமில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 59–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் காஷ்யப், தர வரிசையில் 23–வது இடத்தில் உள்ள சக நாட்டு வீரர் பிரனாய்யை சந்தித்தார்.

1 மணி 5 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரனாய் முதல் செட்டில் 1–7 என்ற கணக்கில் பின்தங்கி இருந்து எழுச்சி கண்டு கைப்பற்றினார். அடுத்த செட்டை காஷ்யப் தன்வசப்படுத்தினார். கடைசி செட்டில் பிரனாய் பிரமாதமாக செயல்பட்டு வெற்றியை உறுதி செய்தார். முடிவில் பிரனாய் 21–15, 20–22, 21–12 என்ற செட் கணக்கில் காஷ்யப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

25 வயதான பிரனாய் வென்ற 3–வது கிராண்ட்பிரி ஒற்றையர் பட்டம் இதுவாகும். ஏற்கனவே 2014–ம் ஆண்டில் இந்தோனேஷிய ஓபன், 2016–ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து ஓபன் பட்டங்களை வென்று இருந்தார். காமன்வெல்த் சாம்பியன் காஷ்யப்பிடம் 2–வது முறையாக மோதிய பிரனாய் முதல்முறையாக அவரை வீழ்த்தி இருக்கிறார்.

வெற்றிக்கு பிறகு இந்திய வீரர் பிரனாய் அளித்த பேட்டியில், ‘இது அருமையான போட்டியாகும். எனக்கும், காஷ்யப்புக்கும் இந்த ஆட்டம் உயர்தரமானதாகும். 2–வது செட்டை மயிரிழையில் இழந்ததும், அமைதியாகவும், பொறுமையுடனும் செயல்பட்டேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. 2–வது செட்டில் காஷ்யப் முதல் செட்டை விட சிறப்பாக செயல்பட்டார். அவர் கடும் நெருக்கடி அளித்தார். 3–வது செட்டில் எனது ஆட்ட திட்டத்தை சற்று மாற்றி செயல்பட்டேன். அந்த செட்டில் நல்ல முன்னிலை பெற்றேன். ஒட்டுமொத்தத்தில் இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து நியூசிலாந்து ஓபன் போட்டியை எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.


Next Story