ஹங்கேரி பார்முலா1 கார்பந்தயம்: ஜெர்மனி வீரர் வெட்டல் முதலிடம்


ஹங்கேரி பார்முலா1 கார்பந்தயம்: ஜெர்மனி வீரர் வெட்டல் முதலிடம்
x
தினத்தந்தி 30 July 2017 9:45 PM GMT (Updated: 30 July 2017 7:05 PM GMT)

ஹங்கேரி பார்முலா1 கார்பந்தயத்தில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதலிடத்தை பிடித்தார்.

புடாபெஸ்ட்

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 11-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட்பிரி அங்குள்ள புடாபெஸ்ட் நகரில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 306.63 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட 4 முறை சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 1 மணி 39 நிமிடம் 46.713 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும்.

அவரை விட 0.908 வினாடி மட்டுமே பின்தங்கிய பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் (பெராரி அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 3-வது இடத்தையும் (15 புள்ளி), முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (12 புள்ளி) 4-வது இடத்தையும் பெற்றனர். போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்ற செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ), ஈஸ்ட்பான் ஒகோன் (பிரான்ஸ்) முறையே 8-வது, 9-வதாக வந்தனர். 4 வீரர்கள் பந்தய தூரத்தை நிறைவு செய்யவில்லை.

இதுவரை நடந்துள்ள 11 சுற்று போட்டிகளின் முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் செபாஸ்டியன் வெட்டல் 202 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லீவிஸ் ஹாமில்டன் 188 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், போட்டாஸ் 169 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

12-வது சுற்று போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந்தேதி பெல்ஜியத்தில் நடக்கிறது. 

Next Story