உலக தடகள போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட்டை தோற்கடித்தார், கேட்லின்

உலக தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் நட்சத்திர வீரர் உசேன் போல்ட்டை அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின் தோற்கடித்தார்.
லண்டன்,
உலக தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் நட்சத்திர வீரர் உசேன் போல்ட்டை அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின் தோற்கடித்தார்.
அதிவேக மனிதன் யார்?உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘உலகின் அதிவேக மனிதன்’ யார் என்பதை நிர்ணயிக்கும் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்தது.
களத்தில் நின்ற 8 வீரர்களில் ஒலிம்பிக் மற்றும் நடப்பு சாம்பியனான ஜமைக்காவின் உசேன் போல்ட் மீதே அனைவரின் பார்வையும் பதிந்து இருந்தது. உசேன் போல்ட்டின் பெயரை ரசிகர்கள் உச்சரித்து ஆர்ப்பரிக்க அரங்கமே அதிர்ந்து கொண்டிருந்தது.
கேட்லின் முதலிடம்ஆனால் போட்டியின் முடிவு தலைகீழாக அமைய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மின்னல் வேகத்தில் ஓடிய அவரது நீண்ட கால எதிரி அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் 9.92 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். மற்றொரு அமெரிக்க வீரர் 21 வயதான கிறிஸ்டியன் கோல்மான் 9.94 வினாடிகளில் 2–வது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். 3–வது இடத்துக்கு தள்ளப்பட்ட உசேன் போல்ட் 9.95 வினாடிகளில் வெண்கலப்பதக்கத்துடன் திருப்திப்பட வேண்டியதாயிற்று.
இந்த உலக தடகளத்துடன் உசேன் போல்ட் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். தோற்கடிக்கப்படாத வீரர் என்ற பெருமையுடன் விடைபெறுவேன் என்று சவால் விட்டிருந்தார். ஆனால் அவரது லட்சியத்திற்கு கேட்லின் முட்டுக்கட்டை போட்டு விட்டார்.
ஊக்கமருந்து பயன்படுத்தியவர்35 வயதான ஜஸ்டின் கேட்லின் இரண்டு முறை ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியவர். 2006–ம் ஆண்டு 2–வது முறையாக மாட்டிய போது 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு 2010–ம் ஆண்டு மீண்டும் களம் திரும்பினார்.
ஊக்கமருந்து பயன்படுத்தியவர் என்பதால் அவரை கேலி செய்யும் வகையில் ரசிகர்கள் கரவொலி எழுப்பினர். வெற்றிக்கனியை பறித்த பிறகும் அவர் மீதான வெறுப்புணர்வு குறையவில்லை. அதனால் ரசிகர்களை நோக்கி அவர் அமைதியாக இருக்குமாறு வாயில் விரல் வைத்து காட்டினார். முதலிடத்தை பிடித்ததும், தடகள உலகின் ஜாம்பவானான உசேன்போல்டின் முன்பு தலைவணங்கி கேட்லின் மரியாதை செலுத்தி நெகிழ வைத்தார்.
உசேன் போல்ட் சொல்வது என்ன?ஒலிம்பிக்கில் 8 தங்கமும், உலக தடகளத்தில் 11 தங்கமும் வென்று பல்வேறு சரித்திர சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் 30 வயதான உசேன் போல்ட் அடுத்த வாரம் நடக்கும் 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்கிறார். அத்துடன் அவரது தடகள வாழ்க்கை நிறைவு பெறுகிறது.
உசேன் போல்ட் கூறுகையில், ‘ஜஸ்டின் கேட்லின் கடுமையான போட்டியாளர். எப்போதும் தனது மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தக்கூடியவர். சிறந்த மனிதர். ரசிகர்கள் அவமதிப்பு செய்வதற்குரிய ஒரு வீரர் அவர் கிடையாது’ என்றார்.
உசேன் போல்ட் மேலும் கூறுகையில், ‘எனது தொடக்கம் சரியாக இல்லை. அது தான் பின்னடைவாகிப்போனது. தங்கப்பதக்கம் வெல்ல முடியாததால் வருத்தம் இல்லை. களம் இறங்கி என்னால் முடிந்ததை செய்தேன். ஆனால் ரசிகர்களுக்காக சாதிக்க முடியாமல் போனதில் ஏமாற்றமே. அதே சமயம் இதில் வெற்றி பெறாமல் போனதால் எனது வாழ்க்கையில் எதுவும் மாறிவிடப்போதில்லை. தடகளத்தில் எல்லாவற்றையும் நான் செய்து காட்டி விட்டேன். இது நான் விலகுவதற்குரிய நேரம். இளம் வீரர் கோல்மானுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது’ என்றார்.