உலக தடகள போட்டி: 200 மீட்டர் ஓட்டத்தில் நெதர்லாந்து வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்


உலக தடகள போட்டி: 200 மீட்டர் ஓட்டத்தில் நெதர்லாந்து வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்
x
தினத்தந்தி 13 Aug 2017 4:45 AM IST (Updated: 13 Aug 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

உலக தடகளத்தில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நெதர்லாந்து வீராங்கனை டப்னே ஸ்சிப்பர்ஸ் மீண்டும் தங்கப்பதக்கம் வென்றார்.

லண்டன்,

16-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நடப்பு சாம்பியனான நெதர்லாந்து வீராங்கனை டப்னே ஸ்சிப்பர்ஸ் 22.05 வினாடியில் முதலிடம் பிடித்து மீண்டும் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஐவரிகோஸ்ட் வீராங்கனை மரிய ஜோசி வெள்ளிப்பதக்கமும் (22.08 வினாடி), பகாமஸ் வீராங்கனை ஷானே மில்லர் (22.15 வினாடி) வெண்கலமும் வென்றனர்.

4-வது தங்கம் வென்ற பிரிட்னி ரீஸ்

நீளம் தாண்டுதலில் அமெரிக்க வீராங்கனை பிரிட்னி ரீஸ் 7.02 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டார். 30 வயதான அவர் ஏற்கனவே 2009, 2011, 2013-ம் ஆண்டுகளிலும் தங்கம் வென்று இருந்தார். ரஷிய தடகள சம்மேளனம் தடை செய்யப்பட்டு இருப்பதால் அங்கீகரிக்கப்பட்ட பொதுவான வீராங்கனை என்ற முறையில் இந்த போட்டியில் அடியெடுத்து வைத்த டார்யா கிலிஸ்ஹினா 7 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், ஒலிம்பிக் சாம்பியன் டியன்னா பார்டோலெட்டா (அமெரிக்கா) 6.97 மீட்டர் தாண்டி வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

ஆண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீரர் பாவெல் பாஜ்டெக் 79.81 மீட்டர் தூரம் வீசி தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இந்திய அணிக்கு ஏமாற்றம்

ஜமைக்கா ஜாம்பவான் உசேன் போல்ட், தனது கடைசி பந்தயமான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் தங்கள் அணிக்காக 3-வது வீரராக ஓடினார். சக வீரர்கள் மைக்கேல் கேம்ப்பெல், ஜூலியன் போர்ட், டைகுயன்டோ டிராசி ஆகியோரும் ஓடிய இந்த பந்தயத்தில் ஜமைக்கா அணி 37.95 வினாடிகளில் இலக்கை கடந்து இறுதிசுற்றுக்கு முன்னேறியது.

4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் ஆரோக்யராஜீவ், முகமது அனாஸ், ஜேக்கப் அமோஜ், குன்ஹூ முகமது ஆகியோர் அடங்கிய இந்திய குழு 3 நிமிடம் 02.80 வினாடிகளில் இலக்கை அடைந்து 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டு, இறுதிசுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதன் பெண்கள் பிரிவில் நிர்மலா, பூவம்மா, ஜிஸ்னா மேத்யூ, அனில்டா ஆகியோர் கொண்ட இந்திய அணி ஓடுபாதையில் இருந்து விலகி விதிமீறியதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
1 More update

Next Story