புரோ கபடி லீக்: அரியானா–தமிழ் தலைவாஸ் அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது


புரோ கபடி லீக்: அரியானா–தமிழ் தலைவாஸ் அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது
x
தினத்தந்தி 16 Aug 2017 9:45 PM GMT (Updated: 16 Aug 2017 9:47 PM GMT)

புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த அரியானா ஸ்டீலர்ஸ்–தமிழ் தலைவாஸ் அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் சமனில் முடிந்தது.

ஆமதாபாத்,

5–வது புரோ கபடி லீக் ஐதராபாத், ஆமதாபாத், நாக்பூர் உள்பட பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். அத்துடன் அடுத்த பிரிவில் உள்ள அணியை ஒருமுறை சந்திக்க வேண்டும்.

ஆமதாபாத்தில் நேற்று இரவு நடந்த 30–வது லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள அரியானா ஸ்டீலர்ஸ்–‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. இரண்டும் இந்த ஆண்டு புதிதாக கால்பதித்த அணிகளாகும்.

விறுவிறுப்பான இந்த மோதலில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்தாலும் அரியானா ஸ்டீலர்ஸ் அணியே ஆதிக்கம் செலுத்தியது. 4–4, 10–10 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வந்தாலும் முதல் பாதி முடிவில் அரியானா ஸ்டீலர்ஸ் 13–10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்பாதியில் தமிழ் தலைவாஸ் அணி எழுச்சி பெற்றது. பிரபஞ்சன் முக்கியமான கட்டத்தில் ரைடில் 2 புள்ளிகள் எடுத்து அரியானா ஸ்டீலர்ஸ் அணியை ஆல்–அவுட் செய்ய வழிவகுத்தார். ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 20–16 என்ற கணக்கில் முன்னிலை கண்டு வலுவாக இருந்தது. ஆனால் கடைசி 5 நிமிடத்தில் இரு அணிகளுக்குள் இடையே மிகவும் நெருக்கமான போட்டி நிலவியது. கடைசி 2 நிமிடங்களில் தமிழ் தலைவாஸ் அணியில் 4 வீரர்கள் மட்டுமே களத்தில் இருந்ததால் கடும் நெருக்கடிக்கு ஆளானது. அதுவும் கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி தடுப்பு ஆட்டத்தில் 2 புள்ளிகளை இழந்ததால் அரியானா 25–24 என்ற கணக்கில் மயிரிழையில் முன்னிலை பெற்றது.

ஆனால் அந்த முன்னணியை அரியானா அணியால் தக்க வைத்து கொள்ள முடியவில்லை. கடைசி ரைடு சென்ற தமிழ் தலைவாஸ் அணி வீரர் டாங் லீக் போனஸ் புள்ளி சேர்த்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். இதையடுத்து திரிலிங்கான இந்த ஆட்டம் 25–25 என்ற புள்ளி கணக்கில் சமனில் (டை) முடிந்தது.

4–வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்டது. 3–வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ‘டை’ கண்டுள்ளது. 4–வது ஆட்டத்தில் விளையாடிய அரியானா அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, இரண்டு ‘டை’ சந்தித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) ஆமதாபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் தபாங் டெல்லி–தமிழ் தலைவாஸ் (இரவு 8 மணி), குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்–பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story