துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 21 Aug 2017 10:15 PM GMT (Updated: 21 Aug 2017 7:40 PM GMT)

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி, வங்காளதேச கிரிக்கெட் வாரிய லெவன் அணியுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இந்த பயிற்சி ஆட்டம் பாதுல்லாவில் இன்று தொடங்க இருந்தது. ஆனால் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக மைதானத்தில் அதிக தண்ணீர் தேங்கி நின்றதால் பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் அர்ஜூனா விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதுக்கு உரியவர்களை தேர்வு கமிட்டி சிபாரிசு செய்யும். கவுரவமிக்க இந்த விருது வழங்குவதில் அவ்வப்போது சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட தனது பெயரை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகில இந்திய டென்னிஸ் சங்கம் தேர்வு குழுவுக்கு பரிந்துரை செய்யவில்லை என்று ரோகன் போபண்ணா குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் அர்ஜூனா விருது தேர்வுக்கான விதிமுறையில் மாற்றம் செய்ய மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனம் வீரரின் பெயரை பரிந்துரை செய்யாவிட்டாலும் அவருக்கு விருது பெறுவதற்கான தகுதி இருந்தால் விருது கமிட்டி பரிந்துரை செய்யலாம் என்று விதிமுறை திருத்தப்படும் என்று தெரிகிறது.

* உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 24 இடங்கள் முன்னேற்றம் கண்டு 156-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் ராம்குமார் ராமநாதன் இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் என்ற இடத்தை யுகி பாம்ப்ரியை பின்னுக்கு தள்ளி தன்வசப்படுத்தினார். யுகி பாம்ப்ரி ஒரு இடம் சறுக்கி 158-வது இடத்தை பிடித்துள்ளார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா 17-வது இடத்தில் நீடிக்கிறார். லியாண்டர் பெயஸ் 5 இடம் பின்னடைவு கண்டு 64-வது இடம் பெற்றுள்ளார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஒரு இடம் சரிந்து 8-வது இடத்தை பெற்றுள்ளார்.

* உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்சில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான கிரிகோ ரோமன் 71 கிலோ எடைப்பிரிவில் தகுதி சுற்றில் இந்திய வீரர் யோகேஷ் 1-3 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வீரர் தகேஷி இசுமியிடம் தோல்வி கண்டார். இதேபோல் 75 கிலோ பிரிவில் இந்திய வீரர் குர்பிரீத்சிங், 85 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ரவீந்தர் காத்ரி, 98 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஹர்தீப் ஆகியோர் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தனர்.

Next Story