புரோ கபடி லீக்: குஜராத், பெங்கால் அணிகள் வெற்றி


புரோ கபடி லீக்: குஜராத், பெங்கால் அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 22 Aug 2017 10:00 PM GMT (Updated: 22 Aug 2017 7:53 PM GMT)

புரோ கபடி லீக் திருவிழாவில் நேற்றைய ஆட்டங்களில் குஜராத், பெங்கால் அணிகள் வெற்றி கண்டன.

லக்னோ,

5-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் உள்ள அணியுடன் ஒரு முறையும் மோத வேண்டும்.

இந்த நிலையில் லக்னோவில் நேற்றிரவு நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சும், புனேரி பால்டனும் (ஏ பிரிவு) சந்தித்தன. விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் பாதியில் 16-7 முன்னிலை பெற்ற குஜராத் அணி தனது ஆதிக்கத்தை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது. முடிவில் குஜராத் அணி 35-21 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்தது. 10-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணிக்கு இது 7-வது வெற்றியாகும். அந்த அணியில் அதிகபட்சமாக பாஸில் 9 புள்ளிகளும், சுகேஷ் 5 புள்ளிகளும் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் உத்தரபிரதேச யோத்தாவும், பெங்கால் வாரியர்சும் (பி பிரிவு) மோதின. இதில் பாதியில் 14-19 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த உத்தரபிதேச அணி அதன் பிறகு மளமளவென புள்ளிகளை குவித்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 3 நிமிடம் இருந்த போது ஆட்டம் 29-29 சமநிலையை எட்டியது. இதன் பின்னர் கடைசி நிமிடங்களில் சில புள்ளிகளை சேர்த்த பெங்கால் வாரியர்ஸ் ஒரு வழியாக வெற்றிக்கனியை பறித்தது.

திரிலிங்கான இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 32-31 என்ற புள்ளி கணக்கில் உள்ளூர் அணியான உத்தரபிரதேசத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது.

இன்றைய ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்- தபாங் டெல்லி (இரவு 8 மணி), உத்தரபிரதேச யோத்தா- தமிழ் தலைவாஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story