உலக பேட்மிண்டன் போட்டி 2-வது சுற்று ஆட்டத்தில் சிந்து வெற்றி


உலக பேட்மிண்டன் போட்டி 2-வது சுற்று ஆட்டத்தில் சிந்து வெற்றி
x
தினத்தந்தி 22 Aug 2017 10:15 PM GMT (Updated: 22 Aug 2017 7:58 PM GMT)

உலக பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

கிளாஸ்கோ,

23-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், உலக போட்டியில் 2 முறை வெண்கலப் பதக்கம் வென்றவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக தர வரிசையில் 42-வது இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் கிம் ஹோ மின்னை எதிர்கொண்டார்.

5-ம் நிலை வீராங்கனையான சிந்து 21-16, 21-14 என்ற நேர்செட்டில் கிம் ஹோ மின்னை தோற்கடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 49 நிமிடங்கள் தேவைப்பட்டது. சிந்துவை போன்றே நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால் தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் சப்ரினா ஜாகுயிட்டை சந்திக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் உலக தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் இந்திய வீரரான சாய் பிரனீத் 21-18, 21-17 என்ற நேர்செட்டில் 44-ம் நிலை வீரரான வெய் நானை (ஹாங்காங்) தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். சாய் பிரனீத் அடுத்து இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகாவை எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 21-14, 21-12 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியாவின் லூகா வாபெரை எளிதில் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஒலிம்பிக்கில் 3 முறை வெள்ளிப்பதக்கம் வென்ற முன்னாள் நம்பர் ஒன் வீரரான லீ ஷோங் வெய் (மலேசியா) 19-21, 24-22, 17-21 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் பிரைஸ் லெவர்ட்ஸ்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சுமித் ரெட்டி-அஸ்வினி ஜோடி 17-21, 21-18, 5-21 என்ற செட் கணக்கில் சீனாவின் வாங் யில்யு-ஹூயாங் டோங்பிங் இணையிடம் வீழ்ந்தது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-மனீஷா இணை 20-22, 18-21 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் மத்யாஸ் கிறிஸ்டியன் சென்-சாரா ஜோடியிடம் தோல்வி கண்டு நடையை கட்டியது. இன்னொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி கூட்டணி 21-12, 21-19 என்ற நேர்செட்டில் யோகேந்திரன் கிருஷ்ணன் (மலேசியா)-பிராஜக்தா சவாந்த் (இந்தியா) ஜோடியை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

Next Story