புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் 4-வது தோல்வி


புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் 4-வது தோல்வி
x
தினத்தந்தி 26 Aug 2017 9:30 PM GMT (Updated: 26 Aug 2017 7:52 PM GMT)

5-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மும்பை,

5-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் உள்ள அணியுடன் ஒரு முறையும் மோத வேண்டும்.

இந்த நிலையில் மும்பையில் நேற்று இரவு நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) தமிழ் தலைவாஸ், நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் 8-4 என்று முன்னிலை வகித்த தமிழ் தலைவாஸ் அணி அதன் பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அபாரமாக செயல்பட்ட பாட்னா அணி தொடர்ந்து 10 புள்ளிகளை குவித்ததுடன் தமிழ் தலைவாஸ் அணியை ‘ஆல்-அவுட்’ செய்தது. முதல் பாதியில் பாட்னா பைரட்ஸ் அணி 16-9 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. பிற்பாதியிலும் பாட்னா பைரட்ஸ் அணியின் ஆதிக்கம் நீடித்ததுடன், மீண்டும் ஒரு முறை தமிழ் தலைவாஸ் அணியை ஆல்-அவுட் ஆக்கியது. முடிவில் பாட்னா பைரட்ஸ் அணி 35-24 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. 7-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 4-வது தோல்வியாகும். ஒரு ஆட்டத்தில் வெற்றியும், 2 ஆட்டத்தில் டையும் கண்டுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 26-24 என்ற புள்ளி கணக்கில் உள்ளூர் அணியான மும்பையை வீழ்த்தியது. இன்றைய ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 8 மணி), மும்பை-தபாங் டெல்லி (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story