உலக பேட்மிண்டன் போட்டி: அரைஇறுதியில் சாய்னா போராடி தோல்வி


உலக பேட்மிண்டன் போட்டி: அரைஇறுதியில் சாய்னா போராடி தோல்வி
x
தினத்தந்தி 26 Aug 2017 10:30 PM GMT (Updated: 26 Aug 2017 8:04 PM GMT)

உலக பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் போராடி தோற்று வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.

கிளாஸ்கோ,

23-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் உலக தர வரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 12-ம் நிலை வீராங்கனை நஜோமி ஒகுஹராவை (ஜப்பான்) சந்தித்தார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் 6-2, 15-6 என்ற கணக்கில் முன்னிலை வகித்த சாய்னா அந்த செட்டை 22 நிமிடத்தில் தன்வசப்படுத்தினார். 2-வது செட்டில் நஜோமி 5-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றாலும், சாய்னா சரிவில் இருந்து மீண்டு வந்து 10-10, 16-16, 17-17 என்ற கணக்கில் சமநிலையை எட்டினார். ஆனால் அதன் பிறகு சாய்னாவின் ஆட்டத்தில் அதிக தவறுகள் தலைகாட்டியது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட நஜோமி அந்த செட்டை 27 நிமிடத்தில் தனதாக்கினார்.

இருவரும் தலா ஒரு செட்டை கைப்பற்றியதால் வெற்றி யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 3-வது செட் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரங்கேறியது. இதில் 1-1, 3-3 என்ற கணக்கில் சமநிலை கண்ட சாய்னா, பின்னர் நஜோமியின் ஆக்ரோஷமான ஷாட்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். நஜோமி ஒரு கட்டத்தில் 10-3, 12-4, 17-7 என்ற கணக்கில் மள, மளவென முன்னிலையை அதிகரித்தார். இறுதியில் சாய்னா நம்பிக்கை குலைந்தவர் போல் ஆடி கோட்டை விட்டார். கடைசி செட்டை நஜோமி 24 நிமிடத்தில் சொந்தமாக்கினார்.

74 நிமிடம் நீடித்த இந்த மோதலில் 27 வயதான சாய்னா 21-12, 17-21, 10-21 என்ற செட் கணக்கில் நஜோமியிடம் அதிர்ச்சிகரமாக வீழ்ந்தார். தோல்வி அடைந்தாலும் சாய்னாவுக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது. லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்த சாய்னா, 2015-ம் ஆண்டு உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தி இருந்தார். அதே சமயம் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான 23 வயதான நஜோமி உலக பேட்மிண்டனில் பதக்கம் வெல்ல இருப்பது இதுவே முதல்முறையாகும்.

முன்னதாக கால்இறுதி ஆட்டத்தில் நஜோமி, ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை சாய்த்தது கவனிக்கத்தக்கது. ஏற்கனவே இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேறி இருப்பதால் இந்த போட்டியில் முதல்முறையாக இந்தியா 2 பதக்கத்துடன் தாயகம் திரும்புகிறது.

ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான சீனாவின் சென் லாங் 9-21, 10-21 என்ற நேர் செட்டில் விக்டர் ஆக்சல்சென்னிடம் (டென்மார்க்) ‘சரண்’ அடைந்தார். உலக பேட்மிண்டனில் டென்மார்க் வீரர் ஒருவர் இறுதிசுற்றை எட்டுவது 16 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் நிகழ்வாகும்.

Next Story