உலக குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர்கள் அமித், கவுரவ் கால்இறுதிக்கு தகுதி


உலக குத்துச்சண்டை போட்டி:  இந்திய வீரர்கள் அமித், கவுரவ் கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 28 Aug 2017 10:45 PM GMT (Updated: 28 Aug 2017 7:28 PM GMT)

உலக குத்துச்சண்டை போட்டியில் 2–வது சுற்றில் இந்திய வீரர்கள் அமித் பான்கல், கவுரவ் பிதுரி ஆகியோர் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

ஹம்பர்க்,

விகாஸ் கிருஷ்ணன், சுமித் சங்வான் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

19–வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 49 கிலோ உடல் எடைப்பிரிவில் 2–வது சுற்று பந்தயத்தில் இந்திய வீரர் அமித் பான்கல், 7–ம் நிலை வீரர் கார்லோஸ் குய்போவை (ஈகுவடார்) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் நேர்த்தியான குத்துகளை விட்ட அமித் பான்கல் 5–0 என்ற புள்ளி கணக்கில் கார்லோசை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

கால்இறுதியில் அமித் பான்கல், 2–ம் நிலை வீரரான ஹசன்பாய் டஸ்மடோவ்வை (உஸ்பெகிஸ்தான்) சந்திக்கிறார்.

56 கிலோ உடல் எடைப்பிரிவில் 2–வது சுற்றில் இந்திய வீரர் கவுரவ் பிதுரி, உக்ரைன் வீரர் மைகோலா பட்சென்கோவுடன் மோதினார். இதில் கவுரவ் பிதுரி 4–1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கால்இறுதியில் கவுரவ் பிதுரி, துனிசியா வீரர் பிலெல் ஹம்தியை எதிர்கொள்கிறார்.

75 கிலோ உடல் எடைப்பிரிவில் 2–வது சுற்றில், 2011–ம் ஆண்டு உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரும், 3–ம் நிலை வீரருமான இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் யாரும் எதிர்பாராத வகையில் இங்கிலாந்தின் பெஞ்சமின் விட்டாகெரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

91 கிலோ உடல் எடைப்பிரிவில் 2–வது சுற்றில், ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் சுமித் சங்வான், ஆஸ்திரேலிய வீரர் ஜாசன் வாட்லேவிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார். விகாஸ் கிருஷ்ணன், சுமித் சங்வான் ஆகியோர் இந்த போட்டி தொடரில் பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 2–வது சுற்றிலேயே இருவரும் வெளியேறி இருப்பது இந்திய அணிக்கு பெருத்த அதிர்ச்சியை அளித்துள்ளது.

Next Story