வில்வித்தை சிறுமி


வில்வித்தை சிறுமி
x
தினத்தந்தி 17 Sep 2017 8:25 AM GMT (Updated: 17 Sep 2017 8:24 AM GMT)

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுமி வில்வித்தையில் இரட்டை சாதனைகள் படைத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

ந்திர மாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுமி வில்வித்தையில் இரட்டை சாதனைகள் படைத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். விஜயவாடாவை சேர்ந்த அந்த சிறுமியின் பெயர் செர்குரி டோலி ஷிவானி. 10 மீட்டர் தூர இடைவெளியில் குறிபார்த்து 103 அம்புகளை எய்து அசத்தியிருக்கிறார். அதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் 11 நிமிடம், 19 விநாடிகள் மட்டுமே. வில்லின் உயரம் கூட இல்லாத சிறுமி வில்லில் இருந்து அம்புகளை இடைவெளியின்றி சீறி பாயவிட்டும், நேர்த்தியாக இலக்கை பதம் பார்த்தும் எய்ததை பார்த்து பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தினார்கள். முதல் சாதனைக்கு 11 நிமிடம் எடுத்துக்கொண்டவர், இரண்டாம் சாதனையை 5 நிமிடத்தில் முடித்து விட்டார்.

அதாவது 20 மீட்டர் தூரத்தில் இருந்து 36 அம்பு களை 5 நிமிடம், 8 விநாடிகளில் இலக்கில் குவிய வைத்துவிட்டார். சிறுமியின் இந்த முயற்சி ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளது. ஷிவானி, வில்வித்தை விளையாட்டை பின்னணியாக கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். அவருடைய தந்தை செர்குரி சத்தியநாராயணா, வில்வித்தை அகாடமி நடத்தி வருகிறார். அவருடைய சகோதரர் சர்வதேச வில்வித்தை வீரர் மற்றும் பயிற்சியாளராக இருந்தவர். தந்தையிடம் கற்றுக்கொண்ட வில்வித்தை சிறுவயதிலேயே ஷிவானியை சாதனையாளராக மாற்றி இருக்கிறது.

“ஷிவானியின் செயல் திறன் சிறப்பாக இருந்தது. இந்த வயதில் சாதனை செய்ய முயற்சிப்பது சாதாரணமான விஷயமல்ல. அவளுக்கு இது பெரிய சவாலாகவே அமைந்தது. எனினும் சாதித்துவிட்டாள். அவளுக்கு பயிற்சி அளித்த வில்வித்தை அகாடமியின் முயற்சியை பாராட்டுகிறோம்” என்கிறார், இந்திய வில்வித்தை சங்க அதிகாரி, ஷார்வன் குமார்.

ஷிவானி, 2 வயதில் இருந்தே வில்வித்தை பயிற்சி பெற்று வருகிறார். அடுக்கடுக்காக அம்புகளை இலக்கை நோக்கி பறக்க விடும் விதம் யூ டியூப்பில் இடம்பெற்று பார்வையாளர் களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

Next Story