இந்திய வீராங்கனை சிந்து ‘சாம்பியன்’ இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனை வீழ்த்தினார்


இந்திய வீராங்கனை சிந்து ‘சாம்பியன்’  இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனை வீழ்த்தினார்
x
தினத்தந்தி 17 Sep 2017 9:30 PM GMT (Updated: 17 Sep 2017 7:42 PM GMT)

கொரியா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சிந்து, உலக சாம்பியன் ஒகுஹராவை போராடி தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார்.

சியோல்,

கொரியா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சிந்து, உலக சாம்பியன் ஒகுஹராவை போராடி தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார்.

கொரியா ஓபன்

கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டித் தொடர் தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வந்தது. இதில் நேற்று அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 4–வது இடம் வகிக்கும் பி.வி.சிந்துவும் (இந்தியா), 8–ம் நிலை வீராங்கனையும், உலக சாம்பியனுமான நஜோமி ஒகுஹராவும் (ஜப்பான்) பலப்பரீட்சை நடத்தினர்.

எதிர்பார்த்தது போலவே இருவரும் நீயா–நானா என்று பலமாக வரிந்து கட்டி நின்றார்கள். இதனால் முதல் புள்ளியில் இருந்தே ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது. தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஒகுஹரா முதல் செட்டை கைப்பற்றுவது போல் 20–18 என்ற கணக்கில் நெருங்கினார். ஆனால் அந்த முக்கியமான தருணத்தில் ஒகுஹரா பந்தை வலையில் அடித்தும், வெளியில் அடித்தும் செய்த தவறுகள் முதல் செட் சிந்துவின் வசம் சென்றது.

2–வது செட்டில் ஆக்ரோ‌ஷம் காட்டிய ஒகுஹரா, சிந்துவின் கையை ஓங்க விடாமல் அடக்கி, அந்த செட்டை எளிதில் தனதாக்கினார்.

சிந்து சாம்பியன்

இதையடுத்து 3–வது செட்டில் அனல் பறந்தது. இருவரும் சளைக்காமல் மட்டையை சுழட்டி மல்லுகட்டினர். ஒரு கேமில் இடைவிடாது 56 ஷாட்டுகள் வரை ரசிகர்களை பரவசமடையச் செய்தது. ஆனாலும் சிந்துவின் அசுரவேக ஷாட்டுகள் அவருக்கு முன்னிலையை ஏற்படுத்தி தந்தன. கடைசியில் சாம்பியன்ஷிப்புக்குரிய புள்ளியை எதிராளி பந்தை வெளியில் அடித்து விட்டு தாரை வார்க்க, சிந்து வெற்றி மங்கையாக உருவெடுத்தார்.

1 மணி 23 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் பி.வி.சிந்து 22–20, 11–21, 21–18 என்ற செட் கணக்கில் ஒகுஹராவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். 26 ஆண்டு கால கொரியா ஓபன் பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியர் ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும். கடந்த மாதம் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இதே ஒகுஹராவிடம் தான் சிந்து போராடி வீழ்ந்தார். அதற்கு வட்டியும் முதலுமாக பழிதீர்த்துக் கொண்டார். மேலும் தொடர்ச்சியாக 14 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த 22 வயதான ஒகுஹராவின் வீறுநடைக்கும் சிந்து முட்டுக்கட்டை போட்டு விட்டார். இருவரும் இதுவரை 8 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி அதில் இருவரும் தலா 4–ல் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.25½ லட்சம் பரிசு

வாகை சூடிய ஐதராபாத்தை சேர்ந்த 22 வயதான சிந்துவுக்கு ரூ.25½ லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. சூப்பர் சீரிஸ் வகை பட்டத்தை சிந்து ருசிப்பது இது 3–வது முறையாகும். ஏற்கனவே 2015–ம் ஆண்டு சீனா ஓபனையும், 2017–ம் ஆண்டில் இந்திய ஓபனையும் வென்று இருந்தார்.

சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், ‘என்ன ஒரு அற்புதமான சூப்பர் சீரிஸ் போட்டி. இரு வீராங்கனைகளும் முழு உத்வேகத்துடன், மன உறுதியுடன் விளையாடினர். கிட்டத்தட்ட உலக சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை நினைவுப்படுத்துவது போல் இருந்தது. ஆனால் முடிவு மட்டும் வேறு விதமாக அதாவது நமக்கு சாதகமாக அமைந்தது. இருவருமே சிறந்த சாம்பியன்கள் தான்’ என்றார்.

பிரதமர் வாழ்த்து

வரலாறு படைத்த சிந்துவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ‘சிந்துவின் சாதனை இந்தியாவை பெருமிதம் கொள்ளச் செய்கிறது’ என்று பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டு செய்தியில் கூறியுள்ளார். மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் ரத்தோர், தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகர் ராவ், மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும் பிரபலங்கள் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘22 வயதில் சிந்து ஜாம்பவான் ஆகி விட்டார். என்ன ஒரு திறமையான வீராங்கனை. வியப்புக்குரிய வெற்றியை பெற்ற சிந்துவுக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story