புரோ கபடி: தமிழ் தலைவாஸ் 7-வது தோல்வி


புரோ கபடி: தமிழ் தலைவாஸ் 7-வது தோல்வி
x
தினத்தந்தி 20 Sep 2017 11:00 PM GMT (Updated: 20 Sep 2017 7:10 PM GMT)

5-வது புரோ கபடி லீக் போட்டித் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

ராஞ்சி,

நேற்றிரவு ராஞ்சியில் அரங்கேறிய 86-வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) தமிழ் தலைவாஸ் அணி, நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை எதிர்கொண்டது. தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ், எதிரணியை ஆல்-அவுட் செய்ததுடன் முதல் பாதியில் 18-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆனால் தமிழ் தலைவாசின் ‘பிடி’, பிற்பாதியில் பாட்னா வீரர்களின் ஆக்ரோஷத்தில் தளர்ந்தது. பாட்னா நட்சத்திர வீரர்கள் பர்தீப் நார்வல், மோனு கோயட் ஆகியோரின் அபாரமான ரைடுகளினால் தமிழ் தலைவாஸ் இரண்டு முறை ஆல்-அவுட் ஆகியது. இதனால் பின்தங்கி கிடந்த பாட்னா ஒரு கட்டத்தில் 34-29 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. தமிழ் தலைவாஸ் வீரர்கள் இறுதி கட்டத்தில் சமனுக்கு கொண்டு வர முயற்சித்தும், அஜய் தாகூர் கடைசி நிமிடத்தில் அவுட் ஆனதால் அதுவும் ஈடேறவில்லை.

திரிலிங்கான ஆட்டத்தின் முடிவில் பாட்னா பைரட்ஸ் அணி 41-39 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது. பாட்னா அணியில் மோனு கோயட் 12 புள்ளிகளும், பர்தீவ் நார்வல் 9 புள்ளிகளும், தலைவாஸ் அணியில் அஜய் தாகூர் 12 புள்ளிகளும், பிரபஞ்சன் 8 புள்ளிகளும் எடுத்தனர். 11-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 7-வது தோல்வியாகும். தமிழ் தலைவாஸ் 2 வெற்றியும், 2 சமனும் (டை) கண்டுள்ளது. அதே சமயம் 16-வது லீக்கில் விளையாடிய பாட்னாவுக்கு இது 9-வது வெற்றியாகும்.
முன்னதாக நடந்த ஆட்டத்தில் (ஏ பிரிவு) குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் 45-23 என்ற புள்ளி கணக்கில் மும்பையை வீழ்த்தியது.

இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர்-அரியானா (இரவு 8 மணி), பாட்னா- உத்தரபிரதேச யோத்தா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story