பத்மபூ‌ஷண் விருதுக்கு பி.வி.சிந்து பெயர் பரிந்துரை


பத்மபூ‌ஷண் விருதுக்கு பி.வி.சிந்து பெயர் பரிந்துரை
x
தினத்தந்தி 25 Sep 2017 11:30 PM GMT (Updated: 25 Sep 2017 8:23 PM GMT)

பத்மபூ‌ஷண் விருதுக்கு இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்து இருக்கிறது.

புதுடெல்லி,

கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், தொழில், சமூக சேவை உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான பத்மபூ‌ஷண் விருதுக்கு, இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம் சிபாரிசு செய்து இருக்கிறது. அவரது அபார சாதனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவர் பெயர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய விளையாட்டு அமைச்சக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்த 22 வயதான பி.வி.சிந்து ஐதராபாத்தை சேர்ந்தவர் ஆவார். உலக போட்டியில் ஏற்கனவே 2 முறை வெண்கலப்பதக்கம் வென்று இருக்கும் பி.வி.சிந்து கடந்த மாதம் கிளாஸ்கோவில் நடந்த உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். சமீபத்தில் நடந்த கொரியா ஓபன் போட்டியில் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்று இருக்கும் சிந்து சூப்பர் சீரிஸ் போட்டிகளில் பட்டம் வென்று சாதித்து இருக்கிறார். உலக தர வரிசையில் மீண்டும் 2–வது இடத்தை பிடித்து இருக்கும் சிந்து 2013–ம் ஆண்டில் அர்ஜூனா விருதையும், 2015–ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும், 2016–ம் ஆண்டில் ராஜீவ் கேல்ரத்னா விருதையும் பெற்றுள்ளார். தற்போது சிந்து நாட்டின் 3–வது பெரிய விருதான பத்மபூ‌ஷணுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனியின் பெயரை பத்மபூ‌ஷண் விருதுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் சிபாரிசு செய்து இருந்தது நினைவிருக்கலாம்.


Next Story