தேசிய ஓபன் தடகளம்: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தங்கம் வென்றார்


தேசிய ஓபன் தடகளம்: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 28 Sep 2017 12:00 AM GMT (Updated: 2017-09-28T01:07:56+05:30)

சென்னையில் நடந்து வரும் தேசிய ஓபன் தடகளத்தில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ்குமார் தங்கப்பதக்கம் வென்றார்.

சென்னை,

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 57-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

போட்டியின் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ்குமார் (50.16 வினாடி) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதே போல் வட்டு எறிதலில் சர்வீசஸ் வீரர் தரம்ராஜ் யாதவ் (55.08 மீட்டர்), 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் சர்வீசஸ் வீரர் சப்லே அவினாஷ் (8 நிமிடம் 39.81 வினாடி), போல்வால்ட் பந்தயத்தில் ரெயில்வே வீரர் பிரீத் (5 மீட்டர் உயரம்), உயரம் தாண்டுதலில் ரெயில்வே வீரர் சித்தார்த் யாதவ் (2.23 மீட்டர்), 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் சர்வீசஸ் வீரர் கணபதி (1 மணி 27 நிமிடம் 33 வினாடி) ஆகியோரும் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர்.

பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் ஓ.என்.ஜி.சி. வீராங்கனை ஜானா முர்மு (58.25 வினாடி) முதலிடம் பிடித்தார். 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பந்தயத்தில் ரெயில்வே வீராங்கனை சிந்தா யாதவ் (9 நிமிடம் 49.23 வினாடி) தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஈட்டி எறிதலில் ரெயில்வே வீராங்கனை அனு ராணி (57.90 மீட்டர்) தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
இன்று 4-வது மற்றும் கடைசி நாள் பந்தயங்கள் நடைபெறுகிறது.

Next Story