துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 28 Sep 2017 10:15 PM GMT (Updated: 2017-09-29T02:53:06+05:30)

* அபுதாபியில் நேற்று தொடங்கிய பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த இலங்கை அணி தொடக்க நாளில் நிதானமாக விளையாடி 4 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது.

ஒரு கட்டத்தில் 61 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணியை கருணாரத்னே (93 ரன்), கேப்டன் சன்டிமால் (60 ரன், நாட்-அவுட்), டிக்வெல்லா (42 ரன், நாட்-அவுட்) காப்பாற்றினர். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 27-வது டெஸ்டில் ஆடும் யாசிர் ஷா இதுவரை 151 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை அதிவேகமாக சாய்த்த சுழற்பந்து வீச்சாளர் என்ற சிறப்பு யாசிர் ஷாவுக்கு கிடைத்தது.

* லண்டன் ஓவலில் நேற்று முன்தினம் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 357 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 35.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்திருந்த போது, பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி இங்கிலாந்து அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி ஒரு நாள்போட்டி இன்று நடக்கிறது. 2-வது ஆட்டம் மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

* இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி டெஸ்ட் போட்டிகள் முறையே கேப்டவுன் (ஜனவரி 5-9), செஞ்சூரியன் (ஜன.13-17), ஜோகனஸ்பர்க் (ஜன.24-28) ஆகிய நகரங்களில் நடக்கிறது. ஒரு நாள் போட்டிகள் பிப்ரவரி 1, 4, 7, 10, 13, 16 ஆகிய தேதிகளிலும், 20 ஓவர் போட்டிகள் பிப்ரவரி 18, 21, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. டர்பன் கிங்ஸ்மீட் மைதானம் டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்படாதது ஆச்சரியம் அளித்துள்ளது. ஏனெனில் அது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.

* வங்காளதேசத்துக்கு எதிராக போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று தொடங்கிய முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட்டுக்கு 298 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருக்கிறது. டீன் எல்கர் (128 ரன்), அம்லா (68 ரன்) களத்தில் இருக்கிறார்கள். அறிமுக வீரர் எய்டன் மார்க்ராம் (97 ரன்) ரன்-அவுட் ஆனார்.

Next Story