தமிழ் தலைவாஸ் அணியின் தோல்விக்கு காரணம் என்ன? கேப்டன் அஜய் தாகூர் விளக்கம்


தமிழ் தலைவாஸ் அணியின் தோல்விக்கு காரணம் என்ன? கேப்டன் அஜய் தாகூர் விளக்கம்
x
தினத்தந்தி 5 Oct 2017 9:30 PM GMT (Updated: 5 Oct 2017 7:46 PM GMT)

தமிழ் தலைவாஸ் அணியின் தோல்விக்கு காரணம் என்ன? என்பதற்கு அந்த அணியின் கேப்டன் அஜய் தாகூர் விளக்கம் அளித்தார்.

சென்னை,

5-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் இந்த ஆண்டில் இணைந்த 4 புதிய அணிகளில் சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணியும் ஒன்றாகும். இந்திய கபடி அணியின் சிறந்த ரைடர்களில் குறிப்பிடத்தக்க வீரரான அஜய் தாகூர், தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 2016-ம் ஆண்டில் உலக கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து கலக்கியவரும், கடந்த புரோ கபடி சீசன்களில் பெங்களூரு புல்ஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகளில் இடம் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக புள்ளிகள் குவித்தவர்களில் ஒருவருமான அஜய் தாகூர் அபாரமாக செயல்பட்டாலும், தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் போய்விட்டது.

இமாச்சலபிரதேசத்தை சேர்ந்த 31 வயதான அஜய் தாகூர் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: தமிழ் தலைவாஸ் அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருவதற்கான காரணம் என்ன?

பதில்: எங்கள் அணியில் அதிக அளவில் இளம் வீரர்கள் இடம் பிடித்து உள்ளனர். அவர்களுக்கு போதிய அனுபவம் கிடையாது. அத்துடன் அணிக்கு இது முதல் சீசனாகும். குஜராத் போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம். சொந்த ஊரான சென்னை சுற்று ஆட்டங்களில் தான் எங்கள் அணி கடுமையான போராட்டத்தை சந்தித்தது. நாங்கள் தோல்வி கண்ட ஆட்டங்களிலும் எங்களது ஆட்ட திறன் மோசமாக இருக்கவில்லை. நெருக்கமாக விளையாடி தான் தோல்வியை சந்தித்தோம். அணிக்கு இன்னும் கொஞ்சம் அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: உள்ளூர் போட்டியில் வெற்றி பெற முடியாததற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் உண்டா?

பதில்: கடந்த சீசன்களில் எனக்கும், மஞ்சித் சிலாருக்கும் இடையே நல்ல கூட்டணி அமைந்தது. ஆனால் இந்த சீசனில் அப்படி ஒரு இணை எதுவும் கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்டம் சரியாக அமையாதது தான் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக கருதுகிறேன்.

கேள்வி: தமிழ் தலைவாஸ் அணி ரசிகர்கள் குறித்து?

பதில்: நாங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தாலும் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்த தமிழக ரசிகர்களுக்கு இதயப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் நிறைய கபடி ரசிகர்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டு ரசிகர்களை போல் கபடி வீரர்களிடம் அதிக அன்பும், மரியாதையும் செலுத்தும் ரசிகர்களை கண்டதில்லை.

கேள்வி: ஒலிம்பிக் போட்டியில் கபடி ஆட்டம் இடம் பிடிக்கும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: வருங்காலங்களில் ஒலிம்பிக் போட்டியில் கபடி நிச்சயம் இடம் பெறும் என்று நம்புகிறேன். புரோ லீக் போட்டி மூலம் கபடி மிகவும் பிரபலம் அடைந்து இருக்கிறது. தற்போது கபடி வீரர்களுக்கு எல்லா இடங்களிலும் நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது. கபடியை போன்று வேறு எந்தவொரு விளையாட்டும் வேகமாக வளருவதாக நான் நினைக்கவில்லை.

கேள்வி: கபடிக்காக ஒருநாளில் எத்தனை மணி நேரத்தை செலவிடுகிறீர்கள்?. உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு என்ன?

பதில்: தினசரி காலையில் 2 மணி நேரமும், மாலையில் 3 மணி நேரமும் பயிற்சிக்காக செலவிடுவேன். நான் விலங்குகளை நேசிக்கக்கூடியவன். எனது வீட்டில் பீட்டர், பாதல் என்ற பெயரில் இரண்டு நாய்களை வளர்த்து வருகிறேன். வீட்டில் இருக்கும் சமயங்களில் அந்த இரண்டு நாய்களுடன் அதிக நேரத்தை செலவிட முயற்சிப்பேன்.

இவ்வாறு அஜய் தாகூர் கூறினார்.

Next Story