சென்னை பல்கலைக்கழக தடகளம்: எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை மஞ்சுகா போல்வால்ட்டில் புதிய சாதனை


சென்னை பல்கலைக்கழக தடகளம்: எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை மஞ்சுகா போல்வால்ட்டில் புதிய சாதனை
x
தினத்தந்தி 24 Oct 2017 8:57 PM GMT (Updated: 24 Oct 2017 8:57 PM GMT)

சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி துறை சார்பில் ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

சென்னை,

சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி துறை சார்பில் ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. சர்வதேச தடகள வீராங்கனை மோனிகா ரெட்டி போட்டியை தொடங்கி வைத்தார். சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் 1,085 வீரர்–வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று நடந்த பெண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை மஞ்சுகா 3.40 மீட்டர் உயரம் தாண்டி, கடந்த ஆண்டில் தான் படைத்த (3.20 மீட்டர்) சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் பூங்கொடியும் (சோகா இகெடா), 400 மீட்டர் தடை ஓட்டத்தில் விஷ்ணுபிரியாவும் (எத்திராஜ்), சங்கிலி குண்டு எறிதலில் பிருந்தாவும் (எம்.ஓ.பி.வைஷ்ணவா), உயரம் தாண்டுதலில் வினோதாவும் (எம்.ஓ.பி.வைஷ்ணவா) 800 மீட்டர் ஓட்டத்தில் பிரியாவும் (சோகா இகெடா), டிரிபிள்ஜம்ப் பந்தயத்தில் ஐஸ்வர்யாவும் (எம்.ஓ.பி.வைஷ்ணவா), 5 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயத்தில் சந்தாயியும் (எம்.ஓ.பி.வைஷ்ணவா) முதலிடம் பிடித்தனர்.

ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் மனோவும் (லயோலா), போல்வால்ட்டில் தங்க வசந்தும் (லயோலா), சங்கிலி குண்டு எறிதலில் முகமது ரில்வானும் (லயோலா), 400 மீட்டர் தடை ஓட்டத்தில் கெவின் கிரண்ராஜூம் (லயோலா), 800 மீட்டர் ஓட்டத்தில் ரகுராமும் (எம்.சி.சி.), டிரிபிள்ஜம்பில் ரோகித்தும் (டி.ஜி.வைஷ்ணவா) முதலிடம் பெற்றனர்.


Next Story