காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ககன்நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார்


காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ககன்நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார்
x
தினத்தந்தி 2 Nov 2017 10:00 PM GMT (Updated: 2 Nov 2017 6:32 PM GMT)

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ககன்நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

பிரிஸ்பேன்,

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ககன்நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் போட்டியில் 22 பேர் கலந்து கொண்டனர். இதில் ஆஸ்திரேலிய வீரர் டானே சாம்சன் தகுதி சுற்றில் 624.3 புள்ளிகளுடன் சாதனை படைத்தும், இந்திய வீரர்கள் ககன் நரங் தகுதி சுற்றில் 617.6 புள்ளிகளும், ஸ்வப்னில் குசாலே தகுதி சுற்றில் 619.1 புள்ளிகளும் குவித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள். மொத்தம் 8 பேர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

ககன் நரங் வெள்ளி வென்றார்

இறுதிபோட்டியிலும் அபாரமாக செயல்பட்ட டானே சாம்சன் 247.7 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் ககன் நரங் இறுதிப்போட்டியில் 246.3 புள்ளிகளும் எடுத்து வெள்ளிப்பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே இறுதிப்போட்டியில் 225.6 புள்ளிகள் எடுத்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அன்னுராஜ் சிங் (578 புள்ளிகள்), ராஹி சார்னோபாட் (578 புள்ளிகள்), ஹீனா சித்து (571 புள்ளிகள்) உள்பட 8 பேர் இறுதிபோட்டிக்கு முன்னேறினார்கள்.

இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்

இறுதிபோட்டியில் கடும் போட்டி நிலவியது. ஆஸ்திரேலிய வீராங்கனைகள் லலிதா யாலுஸ்கயா 35 புள்ளியும், எலீனா காலியாபோவிட்ச் 32 புள்ளிகளும் எடுத்து முறையே தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். இறுதிப்போட்டியில் 28 புள்ளிகள் சேர்த்த இந்திய வீராங்கனை அன்னுராஜ் சிங் வெண்கலப்பதக்கம் பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹீனா சித்து (21 புள்ளிகள்) 5–வது இடம் பிடித்தார்.

ரைபிள் மற்றும் பிஸ்டல் போட்டிகளில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி உள்பட 10 பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறது.


Next Story