துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 9 Nov 2017 8:54 PM GMT (Updated: 9 Nov 2017 8:53 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் இறுதியில் பாகிஸ்தானுக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பாகிஸ்தான் பயணம் தள்ளிவைப்பு

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் இறுதியில் பாகிஸ்தானுக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. மூன்று ஆட்டங்களையும் லாகூரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டியது. இந்த நிலையில் பாதுகாப்பு அச்சம் காரணமாக பெரும்பாலான வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல தயங்குகிறார்கள். குறிப்பாக திட்டமிட்டபடி தொடர் நடந்தால் அங்கு செல்ல இயலாது என்று கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, பொல்லார்ட் உள்ளிட்ட மூத்த வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து விட்டனர். இதையடுத்து இந்த தொடர் அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இரு அணிகளுக்கும் ஏதுவான ஒரு மாதத்தில் இந்த போட்டியை நடத்துவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தென்ஆப்பிரிக்க தொடருக்கு தயாராகும் புஜாரா

ந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா அளித்த ஒரு பேட்டியில், ‘அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளேன். இந்த தொடருக்கு தயாராகுவதற்கு இலங்கை தொடர் நல்ல வாய்ப்பாகும். இலங்கை தொடருக்காக நாங்கள் அனைவரும் ஒரே இடத்திற்கு வந்து சேர்ந்ததும், நிச்சயம் தென்ஆப்பிரிக்க தொடர் குறித்து விவாதிப்போம் என்று நம்புகிறேன்’ என்றார்.

டோனிக்கு, நெஹரா ஆதரவு

மீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா அளித்த பேட்டியில், ‘நேர்மையாக நடந்து கொள்ளும் கிரிக்கெட் வீரர்களில் டோனியும் ஒருவர். அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். 2020–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கூட அவரால் பங்கேற்க முடியும். ஒரு பந்து வீச்சாளரான நானே 39 வயது வரை களத்தில் நீடித்தேன் என்றால், சிறப்பான உடல்தகுதியுடன் உள்ள அவரால் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை விளையாட முடியும். அதற்காக நன்றாக ஆடாத நிலையில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சிறப்பாக விளையாட முடியாவிட்டால் அவரே முதல் ஆளாக ஓய்வை அறிவித்து விடுவார். ஓய்வு குறித்து அவரே முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்’ என்றார்.

வங்காளதேச பயிற்சியாளர் ராஜினாமா

ங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரிகா ஹதுருசின்கா (இலங்கையை சேர்ந்தவர்), தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பி உள்ளார். ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்பது குறித்து கடிதத்தில் எதுவும் அவர் குறிப்பிடவில்லை. அவரை இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன் எதிரொலியாகவே அவர் வங்காளதேச பயற்சியாளர் பதவியில் இருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து பவுலர் ஜாக்பால் காயம்

ஆ‌ஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் காயத்தால் சில தினங்களுக்கு முன்பு விலகினார். இந்த நிலையில் அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜாக்பால் காயத்தில் சிக்கியுள்ளார். அடிலெய்டில் நேற்று தொடங்கிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது வலது கணுக்கால் காயத்தால் வெளியேறிய ஜாக்பால் ஆ‌ஷஸ் டெஸ்டில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.


Next Story