துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 11 Nov 2017 8:30 PM GMT (Updated: 11 Nov 2017 8:03 PM GMT)

இங்கிலாந்து–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனில் வருகிற 23–ந் தேதி தொடங்குகிறது.

பயிற்சி கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனில் வருகிற 23–ந் தேதி தொடங்குகிறது. முன்னதாக இங்கிலாந்து–கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகள் இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டம் அடிலெய்டில் நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 293 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 207 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. பின்னர் 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 4–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி 2–வது இன்னிங்சில் 75 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 192 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிபா முன்னாள் தலைவர் மீது வீராங்கனை செக்ஸ் புகார்

சர்வதேச கால்பந்து சங்க (பிபா) முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் மீது அமெரிக்க கால்பந்து அணியை சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீராங்கனை ஹோப் சோலோ செக்ஸ் புகார் தெரிவித்துள்ளார். 2013–ம் ஆண்டு நடந்த உலகின் சிறந்த வீராங்கனை விருது வழங்கும் விழா மேடைக்கு வரும் முன்பு செப் பிளாட்டர் தனது பின்புறத்தை தடவி வரம்பு மீறி நடந்து கொண்டார். என்று அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த குற்றச்சாட்டு கேலிக்குரியது என்று செப்பிளாட்டரின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். செப் பிளாட்டர் 1998–ம் ஆண்டு முதல் 2015–ம் ஆண்டு பிபா தலைவராக இருந்தார். ஊழல் புகார் தொடர்பாக அவருக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசாந்துக்கு அசாருதீன் அறிவுரை

2013–ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து ஆடிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்தது. அதனை எதிர்த்து ஸ்ரீசாந்த் கேரள கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் செய்த அப்பீலில், இந்திய கிரிக்கெட் வாரியம் ஸ்ரீசாந்துக்கு விதித்த ஆயுட்கால தடை தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் அளித்த ஒரு பேட்டியில், ‘ஸ்ரீசாந்த் திறமை வாய்ந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஆவார். இந்திய அணியின் கதவு அவருக்கு அடைக்கப்படவில்லை. அவர் தான் நிரபராதி என்பதை நிரூபித்து விட்டு பொறுமை காக்க வேண்டும். அவர் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பது முக்கியமானது’ என்று தெரிவித்தார்.

விளையாட்டு பொருட்கள் இறக்குமதிக்கு வரிவிலக்கு
–ராஜ்யவர்தன்சிங் ரதோர்

மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் அளித்த ஒரு பேட்டியில், ‘விளையாட்டு வீரர்கள் இறக்குமதி செய்யும் குறிப்பிட்ட விளையாட்டு பொருட்களுக்கு ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்து இருப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது விளையாட்டு வளர்ச்சிக்கு நல்ல ஊக்கம் அளிக்கும். வரி விலக்கு வருகிற 15–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது’ என்று தெரிவித்தார்.

ஐ.சி.சி. மீது வாசிம் அக்ரம் சாடல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் டெலிவி‌ஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான நேரடி போட்டி தொடரை மீண்டும் நடைபெற வைக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) அதிகாரம் இருப்பதாக நான் கருதவில்லை. விளையாட்டையும், அரசியலையும் தனித்தனியாக பார்க்க வேண்டும். ஆ‌ஷஸ் தொடரை 2 கோடி பேர் பார்க்கக்கூடும். ஆனால் பாகிஸ்தான்–இந்தியா அணிகள் இடையே போட்டி தொடர் நடந்தால் 100 கோடிக்கு மேற்பட்டவர்கள் கண்டு களிப்பார்கள். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாட முடியாதது துரதிருஷ்டவசமானது. இரு அணிகள் இடையே போட்டியை நடத்த முடியாதது ஐ.சி.சி.யின் இயலாமையையே காட்டுகிறது’ என்று தெரிவித்தார்.


Next Story