இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் தேர்தலில் இருந்து அனில் கண்ணா விலகல்


இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் தேர்தலில் இருந்து அனில் கண்ணா விலகல்
x
தினத்தந்தி 7 Dec 2017 8:30 PM GMT (Updated: 7 Dec 2017 7:43 PM GMT)

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் வருகிற 14–ந் தேதி நடக்கிறது. இதில் அடுத்த 4 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் வருகிற 14–ந் தேதி நடக்கிறது. இதில் அடுத்த 4 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு சர்வதேச ஆக்கி சங்க தலைவர் நரிந்தர் பத்ரா, ஆசிய டென்னிஸ் பெடரே‌ஷன் தலைவர் அனில் கண்ணா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்காக கடைசி நாள் கடந்த 3–ந் தேதியாகும். வாபஸ் தேதி முடிவடைந்த நிலையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அனில் கண்ணா இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அத்துடன் அவர் தனது ஆதரவை நரிந்தர் பத்ராவுக்கு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் நரிந்தர் பத்ரா எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது. இதுவரை இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒரு குடும்பமாக இருந்து வருகிறது. தேர்தலால் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் விலகல் முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் பதவிக்கு ராஜீவ் மேக்தா மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதால் அவர் மீண்டும் பொதுச்செயலாளர் ஆகிறார். ஒரு சீனியர் துணைத்தலைவர், பொருளாளர், 8 துணைத்தலைவர்கள், 6 இணை செயலாளர்கள் 10 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.


Next Story