88 அணிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடக்கம்


88 அணிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடக்கம்
x
தினத்தந்தி 8 Dec 2017 9:20 PM GMT (Updated: 8 Dec 2017 9:20 PM GMT)

88 அணிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

சென்னை,

88 அணிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

மாநில கைப்பந்து போட்டி

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் தமிழ்நாடு கைப்பந்து சங்கம் அனுமதியுடன் 67–வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் (11–ந் தேதி) முதல் 17–ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 57 அணிகளும், பெண்கள் பிரிவில் 31 அணிகளும் கலந்து கொள்கின்றன. ஆண்களுக்கான போட்டியில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், சுங்க இலாகா, சென்னை ஸ்பைக்கர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் எஸ்.டி.சி. (பொள்ளாச்சி), வருமானவரி, செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி, இந்தியன் வங்கி ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. இதில் இரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள முதல் 3 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். எஞ்சிய 49 அணிகள் 16 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் மோதும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேற ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் 4–வதாக உள்ள அணியில் ஒன்றை சந்திக்கும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி கால்இறுதிக்குள் நுழையும்.

ரசிகர்களுக்கு பரிசு

பெண்களுக்கான போட்டியில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஜேப்பியார் என்ஜினீயரிங் கல்லூரி, ஜி.கே.எம்., பி.கே.ஆர். (கோபி) அணிகளும், ‘பி’ பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப், எஸ்.டி.ஏ.டி., பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி, பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் இரு பிரிவிலும் முதல் 3 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி காணும். மேலும் 2 அணிகள் லீக் ஆட்டங்கள் மூலம் கால்இறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். பெண்கள் பிரிவு லீக் ஆட்டங்கள் நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் ஆண்கள் அணிக்கு எஸ்.என்.ஜெ. கோப்பையும், பெண்கள் அணிக்கு சான் அகாடமி கோப்பையும் வழங்கப்படுகிறது. போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு தினசரி குலுக்கல் முறையில் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

இந்த தகவலை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன்துரை சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க பொருளாளர் ஏ.பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story