பேட்மிண்டன் பிரிமியர் லீக் இன்று தொடக்கம் முதல் நாளில் சிந்து–சாய்னா அணிகள் மோதல்


பேட்மிண்டன் பிரிமியர் லீக் இன்று தொடக்கம் முதல் நாளில் சிந்து–சாய்னா அணிகள் மோதல்
x
தினத்தந்தி 22 Dec 2017 9:30 PM GMT (Updated: 22 Dec 2017 8:30 PM GMT)

பேட்மிண்டன் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேட்மிண்டன் பிரிமியர் லீக் போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது.

கவுகாத்தி,

பேட்மிண்டன் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேட்மிண்டன் பிரிமியர் லீக் போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் சிந்து, சாய்னா அணிகள் நேருக்கு நேர் மல்லுகட்டுகின்றன.

பி.பி.எல். போட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் 3–வது பேட்மிண்டன் பிரிமியர் லீக் (பி.பி.எல்.) போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்கி ஜனவரி 14–ந்தேதி வரை சென்னை, கவுகாத்தி, டெல்லி, லக்னோ, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. இந்த பேட்மிண்டன் திருவிழாவில் சென்னை ஸ்மா‌ஷர்ஸ், ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், லக்னோ அவாதே வாரியர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி டா‌ஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணிக்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டனர். இதன்படி சென்னை அணியில் பி.வி.சிந்து, விருஷாலி, ஆதித்யா ஜோஷி, சும்மத் ரெட்டி, டேனியல் பாரிட் (இவர்கள் அனைவரும் இந்தியர்கள்) கேப்ரியலி அட்காக் (இங்கிலாந்து), பிரைஸ் லிவர்டெஸ் (பிரான்ஸ்), கிறிஸ் அட்காக் (இங்கிலாந்து), தனோங்சக் (தாய்லாந்து), டாங் லீ (சீனதைபே) ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.

சாய்னா, கரோலினா

‘நம்பர் ஒன்’ வீராங்கனையான சீனத்தைபேயின் தாய் ஜூ யிங் (ஆமதாபாத்), இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்ரீகாந்த், காஷ்யப் (அவாதே வாரியர்ஸ்), உலக சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென் (பெங்களூரு), இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா (டெல்லி), இந்திய வீரர் சாய் பிரனீத் (ஐதராபாத்), ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயின் மங்கை கரோலினா மரின் (ஐதராபாத்), தென்கொரியாவின் சன் வான் ஹோ (மும்பை) ஆகிய பிரபலங்களும் கலக்க இருக்கிறார்கள்.

ஒவ்வொரு போட்டியிலும் ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய 5 ஆட்டங்கள் இடம் பெறும். 15 புள்ளி அடிப்படையில் முடிவு நிர்ணயிக்கப்படும். ஒவ்வொரு வெற்றிக்கும் ஒரு புள்ளி வழங்கப்படும். 5 ஆட்டங்களில் ஒன்றை துருப்பு ஆட்டமாக (டிரம்ப் மேட்ச்) தேர்வு செய்து விளையாட வேண்டும். போட்டியில் சுவாரஸ்யத்தையும், பரபரப்பையும் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த ஒரு ஆட்டத்துக்கு மட்டும் வெற்றி காணும் அணிக்கு 2 புள்ளி வழங்கப்படும். அத்துடன் டிரம்ப் ஆட்டத்தில் தோற்கும் அணியின் ஒட்டுமொத்த புள்ளிகளில் ஒன்று குறைக்கப்படும்.

சென்னையிலும்...

லீக் முடிவில் 4 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சிந்து தலைமையிலான சென்னை ஸ்மார்‌ஷர்சும், சாய்னா தலைமையிலான அவாதே வாரியர்சும் கோதாவில் இறங்குகின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.6 கோடி ஆகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.1½ கோடியும், 3–வது மற்றும் 4–வது இடத்தை பெறும் அணிகளுக்கு தலா ரூ.75 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

சென்னை நேரு ஸ்டேடியத்தின் உள்விளையாட்டு அரங்கில் ஜனவரி 5–ந்தேதி முதல் 9–ந்தேதி வரை 5 போட்டிகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டி ஜனவரி 14–ந்தேதி ஐதராபாத்தில் அரங்கேறும்.


Next Story