சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.99 லட்சம் ஊக்கத்தொகை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.99 லட்சம் ஊக்கத்தொகை  எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 2 Jan 2018 9:00 PM GMT (Updated: 2 Jan 2018 7:03 PM GMT)

சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களுக்கு மொத்தம் ரூ.99 லட்சம் ஊக்கத் தொகையை நேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சென்னை,

சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களுக்கு மொத்தம் ரூ.99 லட்சம் ஊக்கத் தொகையை நேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஆசிய தடகள போட்டியில் வென்றவர்கள்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் 2017–ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற 22–வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5,000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கங்கள் வென்ற ஜி.லட்சுமணனுக்கு 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், 4x400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும் வென்ற எஸ்.ஆரோக்ய ராஜீவ்க்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற ஆர்.மோகன் குமாருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும்,

கனடா நாட்டில் 2017–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற 7–வது உலக அளவிலான உயரம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் ஈட்டி எறிதல், குண்டு எறிதல் மற்றும் வட்டுஎறிதல் போட்டிகளில் 3 தங்கப்பதக்கங்கள் வென்ற கே.கணேசனுக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், ஈட்டி எறிதல் போட்டியில் 1 தங்கப்பதக்கம், குண்டு எறிதல் மற்றும் வட்டுஎறிதல் போட்டிகளில் தலா ஒரு வெள்ளிப்பதக்கம் வீதம் 2 வெள்ளிப்பதக்கங்கள் வென்ற சி.மனோஜ்க்கு 11 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், ஈட்டி எறிதல் போட்டியில் 1 தங்கப்பதக்கம் வென்ற செல்வராஜுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் மற்றும் இவர்களின் பயிற்சியாளர்கள் ரஞ்சித்குமார் மற்றும் சுந்தர் ஆகியோருக்கு 4 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும்,

ரூ.99 லட்சம் ஊக்கத்தொகை

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் 2017–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த 9–வது ஆசிய வயதுப் பிரிவினருக்கான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்கள் வென்ற பி.விக்காஸ்க்கு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், 1 தங்கப்பதக்கம் வென்ற வி.லெனார்ட்க்கு 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், 1 வெள்ளிப் பதக்கம் வென்ற சு.தனுஷ்க்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் மற்றும் இவர்களின் பயிற்சியாளர்கள் ஏ.சரோஜினிதேவி, ஏ.கர்ணன் மற்றும் வி. வீரபத்ரன் ஆகியோருக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும்

என மொத்தம் 99 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 விளையாட்டு வீரர்கள் மற்றும் 5 பயிற்சியாளர்களுக்கு தமிழ்நாடு முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (நேற்று) உயரிய ஊக்கத்தொகையாக வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்தநிகழ்வின்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி, தலைமைச் செயலாளர் (முழு கூடுதல்பொறுப்பு) க. சண்முகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைமுதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story