துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 17 Jan 2018 8:30 PM GMT (Updated: 17 Jan 2018 7:57 PM GMT)

வங்காளதேசம், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.

* வங்காளதேசம், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே-இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 290 ரனகள் எடுத்தது. அதிகபட்சமாக மசகட்சா 73 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஆடிய இலங்கை அணி 48.1 ஓவர்களில் 278 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஜிம்பாப்வே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூரில் நேற்று இரவு நடந்த 49-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது. இன்று இரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.

* 4 நாடுகள் இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்தது.

* இரவு விடுதி சண்டை சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் முதல் எந்தவொரு போட்டியில் விளையாடவில்லை. அடுத்த மாதம் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன்சிங் பெடி அளித்த ஒரு பேட்டியில், ‘தென்ஆப்பிரிக்க தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணி சரியாக தயாராகவில்லை. பலவீனமான இலங்கை அணியுடன் விளையாடி இந்திய அணி நேரத்தை வீணடித்து விட்டது. கடினமான இந்த தொடருக்கு இந்திய அணி வலுவாக தயார் ஆகி இருக்க வேண்டும்’ என்று விமர்சித்துள்ளார்.

* பார்வையற்றோருக்கான உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்தது. 20-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

Next Story