குளிர்கால ஒலிம்பிக்: அமெரிக்க ஜோடி தங்கம் வென்று சாதனை


குளிர்கால ஒலிம்பிக்: அமெரிக்க ஜோடி தங்கம் வென்று சாதனை
x
தினத்தந்தி 21 Feb 2018 9:30 PM GMT (Updated: 21 Feb 2018 8:38 PM GMT)

கிக்கன் ரான்டால், ஜெசிகா டிஜின்ஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க குழு தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது.

பியாங்சாங்,

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ‘டவுன்ஹில்’ பிரிவில் இத்தாலி வீராங்கனை சோபியா கோஜியா தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். பனிஉச்சியில் இருந்து மின்னல்வேகத்தில் சீறிப்பாய்ந்து பிரமிக்க வைத்த சோபியா இலக்கை 1 நிமிடம் 39.22 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அவரை விட 0.09 வினாடி பின்தங்கிய நார்வே வீராங்கனை ராக்ஹில்டு வெள்ளிப்பதக்கமும், 2010-ம் ஆண்டு சாம்பியனான அமெரிக்காவின் லின்சே வோன் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.

பெண்கள் அணிக்கான பனிச்சறுக்கு ஸ்பிரின்ட் பிரீஸ்டைல் பிரிவில் (கிராஸ்-கன்ட்ரி) கிக்கன் ரான்டால், ஜெசிகா டிஜின்ஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க குழு தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது. கடும் சவால் அளித்த சுவீடன் ஜோடியை விட 0.19 வினாடி முன்பாக வந்த இவர்கள் 15 நிமிடம் 56.47 வினாடிகளில் இலக்கை எட்டினர். 1976-ம் ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் கிராஸ்-கன்ட்ரி பிரிவில் அமெரிக்கா பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். இதன் ஆண்கள் பிரிவில் நார்வேயின் மார்ட்டின் ஜான்ஸ்ரட்-ஜோகன்னஸ் ஹோஸ்பிளாட் ஜோடி 15 நிமிடம் 56.26 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினர்.

ஐஸ் ஆக்கி போட்டியின் பெண்கள் பிரிவில் நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பின்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் ரஷியாவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றது. இன்று நடைபெறும் தங்கமகுடத்துக்கான இறுதிசுற்றில் கனடா- அமெரிக்கா அணிகள் மல்லுகட்டுகின்றன.

நேற்றைய முடிவில் நார்வே 12 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என்று மொத்தம் 32 பதக்கங்களுடன், பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. ஜெர்மனி 11 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என்று 23 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

Next Story