ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் : இந்தியர்கள் சாதிப்பார்களா?


ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் : இந்தியர்கள் சாதிப்பார்களா?
x
தினத்தந்தி 13 March 2018 11:45 PM GMT (Updated: 13 March 2018 9:04 PM GMT)

ஆல் - இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது

பர்மிங்காம், 

ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி 1899-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. உலகின் பழமையான, புகழ்பெற்ற பேட்மிண்டன் தொடர் என்பதால் இந்த போட்டியில் வாகை சூடுவது ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளின் கனவுகளில் ஒன்றாக இருக்கும்.

மொத்தம் ரூ.6½ கோடி பரிசுத்தொகைக்கான இந்த ஆண்டுக்குரிய ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் திருவிழா பர்மிங்காம் நகரில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி முன்னணி நட்சத்திரங்கள் அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

சிந்து-சாய்னா

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவில் இருந்து பி.வி.சிந்து, சாய்னா நேவால் களம் காணுகிறார்கள். இதில் தரவரிசையில் 11-வது இடம் வகிக்கும் சாய்னா நேவாலுக்கு முதல் சுற்றே பெரும் தடையாக இருக்கிறது. அவர் தொடக்க ரவுண்டில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான தாய் ஜூ யிங்கை (சீனத்தைபே) எதிர்கொள்கிறார்.

இருவரும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 5-ல் சாய்னாவும், 9-ல் தாய் ஜூ யிங்கும் வெற்றி கண்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக அதாவது கடைசியாக தாய் ஜூ யிங்குக்கு எதிராக ஆடிய 7 ஆட்டங்களிலும் சாய்னா தோல்வியையே சந்தித்து இருக்கிறார். 2015-ம் ஆண்டு ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனில் 2-வது இடம் பிடித்தவரான சாய்னா, முந்தைய தோல்விகளுக்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுத்து சாதிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

4-ம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து முதல் சுற்றில், போர்ன்பவீ சோச்சுவோங்குடன் (தாய்லாந்து) மோதுகிறார். ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் (ஸ்பெயின்), 2-ம் நிலை வீராங்கனை அகானே யமாகுச்சி (ஜப்பான்), உலக சாம்பியன் நஜோமி ஒகுஹரா (ஜப்பான்) ஆகியோரும் களத்தில் வரிந்து கட்டி நிற்பார்கள்.

ஸ்ரீகாந்த் பேட்டி

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், கணுக்கால் காயத்தால் முதல் நிலை வீரரும், உலக சாம்பியனுமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) விலகிய நிலையில், 6 முறை சாம்பியனான லின் டான் (சீனா), ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங் (சீனா), நடப்பு சாம்பியன் லீ சோங் வெய் (மலேசியா), 3-ம் நிலை வீரர் ஸ்ரீகாந்த் (இந்தியா), முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் சன் வான் ஹோ (தென்கொரியா) ஆகியோர் இடையே தான் கடும் போட்டி காணப்படுகிறது.

இந்திய முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் முதல் சுற்றில், பிரைஸ் லெவர்டெசை (பிரான்ஸ்) எதிர்கொள்கிறார். சாய் பிரனீத், பிரனாய் ஆகிய இந்திய வீரர்களும் களம் இறங்குகிறார்கள்.

ஸ்ரீகாந்த் கூறுகையில், ‘நூற்றாண்டு கால பழமையான ஆல்-இங்கிலாந்து போட்டி மிகவும் கவுரவமிக்க போட்டிகளில் ஒன்றாகும். பிரகாஷ் படுகோனே (1980-ம் ஆண்டு), கோபிசந்த் (2001-ம் ஆண்டு) ஆகியோர் மட்டுமே இந்திய தரப்பில் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார்கள் என்பதை அறிவேன். இவர்கள் எப்போதும் எங்களுக்கு உத்வேகம் அளிப்பவர்களாக இருப்பார்கள். இந்த போட்டியில் பட்டம் வென்றால், அது ஜாம்பவான் அந்தஸ்தை வழங்கும்’ என்றார்.

புதிய விதிமுறை

ஆண்கள் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி- ரெட்டி பி.சுமீத், ராங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையரில் ஜக்கம்புடி மேஹானா- பூர்விஷா, அஸ்வினி- ரெட்டி என்.சிக்கி, கலப்பு இரட்டையரில் ரெட்டி என்.சிக்கி- பிரனாவ் ஜெர்ரி சோப்ரா ஆகிய இந்திய ஜோடிகளும் பங்கேற்கிறார்கள்.

‘பந்தை சர்வீஸ் செய்யும் போது பேட்மிண்டன் மட்டை (ராக்கெட்) தரையில் இருந்து 1.15 மீட்டர் உயரத்துக்குள் தான் இருக்க வேண்டும்’ என்ற புதிய விதிமுறை இந்த போட்டியில் கொண்டு வரப்படுகிறது. பல வீரர்கள் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், புதிய விதிமுறை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Next Story