அகில இந்திய கைப்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி


அகில இந்திய கைப்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 27 March 2018 9:00 PM GMT (Updated: 27 March 2018 8:58 PM GMT)

சென்னையில் நேற்று தொடங்கிய அகில இந்திய கைப்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி பெற்றது.

சென்னை,

சென்னையில் நேற்று தொடங்கிய அகில இந்திய கைப்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி பெற்றது.

அகில இந்திய கைப்பந்து தொடக்கம்

நெல்லை நண்பர்கள் சங்கம் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 45-வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. ‘தினத்தந்தி’ மற்றும் எஸ்.என்.ஜெ, ஒய்.எம்.சி.ஏ. மெட்ராஸ் ஆதரவுடன் ஏப்ரல் 1-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 11 அணியும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

தொடக்க விழாவுக்கு சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன்துரை தலைமை தாங்கினார். வருமானவரி கமிஷனர் கே.ரவி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், தமிழ்நாடு கைப்பந்து சங்க தலைவர் எஸ்.வாசுதேவன், பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், ஒய்.எம்.சி.ஏ.துணைத்தலைவர் எம்.ஜெ. மார்ட்டின் கென்னடி, ஏபிசி அட்வான்ஸ் பியூட்டி நிறுவன சேர்மன் சரண்வேல், ஓம்சக்தி ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் ஆர்.ராமச்சந்திரன், திருவள்ளூர் மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் எம்.ஜே.மார்ட்டின் சுதாகர், போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் பி.பாலச்சந்திரன், ஏ.தினகரன், சி.ஸ்ரீகேசவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

தமிழக யூத் அணி வெற்றி

ஆண்கள் பிரிவில் நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ்-கேரளா போலீஸ் அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு போலீஸ் அணி 25-16, 19-25, 25-22, 25-17 என்ற செட் கணக்கில் கேரளா போலீஸ் அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் கர்நாடக அணி 32-30, 25-19, 25-27, 25-21 என்ற செட் கணக்கில் ஐ.சி.எப். அணியை சாய்த்தது.

பெண்கள் பிரிவில் நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு யூத் அணி 14-25, 25-23, 25-16, 14-25, 18-16 என்ற செட் கணக்கில் கேரளா போலீஸ் அணியை போராடி வீழ்த்தியது.

இன்றைய ஆட்டங்கள்

இன்று (புதன்கிழமை) நடைபெறும் ஆண்கள் பிரிவு லீக் ஆட்டங்களில் தென் மத்திய ரெயில்வே-வருமான வரி (மாலை 4 மணி), தமிழ்நாடு போலீஸ்-எஸ்.டி.ஏ.டி. (மாலை 5 மணி), ஐ.சி.எப்.-செயின்ட் ஜோசப்ஸ் (மாலை 6 மணி) அணியும், பெண்கள் பிரிவு ஆட்டங்களில் தென் மத்திய ரெயில்வே-தமிழ்நாடு யூத் (மாலை 4 மணி), கேரளா போலீஸ்-தெற்கு ரெயில்வே (மாலை 5 மணி) அணியும் மோதுகின்றன.

Next Story