அகில இந்திய கைப்பந்து போட்டி: தமிழ்நாடு போலீஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி


அகில இந்திய கைப்பந்து போட்டி: தமிழ்நாடு போலீஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 30 March 2018 9:30 PM GMT (Updated: 30 March 2018 8:21 PM GMT)

சென்னையில் நடந்து வரும் அகில இந்திய கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

சென்னை,

சென்னையில் நடந்து வரும் அகில இந்திய கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

அகில இந்திய கைப்பந்து


நெல்லை நண்பர்கள் சங்கம் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 45-வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. ‘தினத்தந்தி’ மற்றும் எஸ்.என்.ஜெ., ஒய்.எம்.சி.ஏ.மெட்ராஸ் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 11 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

இதில் 4-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம். அணி 25-15, 25-19, 25-22 என்ற நேர்செட்டில் கேரளா போலீஸ் அணியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. மற்றொரு கால்இறுதியில் கர்நாடகா அணி 25-23, 25-17, 25-18 என்ற நேர்செட்டில் தென் மத்திய ரெயில்வேயை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.

அரைஇறுதியில் ஐ.சி.எப்.

இன்னொரு கால்இறுதியில் தமிழ்நாடு போலீஸ் அணி 15-25, 25-22, 25-20, 27-25 என்ற செட் கணக்கில் பனிமலர் அணியை பதம் பார்த்து அரைஇறுதியை எட்டியது. மற்றொரு ஆட்டத்தில் ஐ.சி.எப். அணி 25-23, 25-23, 25-21 என்ற நேர்செட்டில் வருமான வரி அணியை சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தெற்கு ரெயில்வே அணி 25-22, 20-25, 17-25, 25-22, 15-8 என்ற செட் கணக்கில் போராடி தென் மத்திய ரெயில்வே அணியை வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கியது.

இன்று பெண்கள் இறுதிப்போட்டி


இன்று நடைபெறும் பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ்நாடு யூத்-கேரளா போலீஸ் அணிகள் (மாலை 5 மணி) மோதுகின்றன. இதைத்தொடர்ந்து நடைபெறும் ஆண்கள் பிரிவு அரைஇறுதி ஆட்டங் களில் எஸ்.ஆர்.எம்.-கர்நாடகா, தமிழ்நாடு போலீஸ்- ஐ.சி.எப். (மாலை 6.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

Next Story