அகில இந்திய கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்


அகில இந்திய கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்
x
தினத்தந்தி 1 April 2018 11:30 PM GMT (Updated: 1 April 2018 10:05 PM GMT)

45-வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை,

நெல்லை நண்பர்கள் சங்கம் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் ‘தினத்தந்தி’ மற்றும் எஸ்.என்.ஜெ., ஒய்.எம்.சி.ஏ.மெட்ராஸ் ஆதரவுடன் 45-வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 25-17, 25-18, 25-15 என்ற நேர் செட் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கர்நாடகம் 25-19, 25-17, 25-17 என்ற நேர் செட்டில் சென்னை ஐ.சி.எப். அணியை வீழ்த்தியது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு தடகள சங்க தலைவர் தேவாரம் தலைமை தாங்கினார். இந்திய விமான நிலையங்களின் பொருளாதார ஒழுங்குமுறை ஆணைய சேர்மன் மச்சேந்திரநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். பட்டம் வென்ற எஸ்.ஆர்.எம். அணிக்கு டாக்டர் சிவந்தி தங்க கோப்பையுடன் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு அளிக்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த தமிழ்நாடு போலீஸ் அணிக்கு ரோமா கோப்பையுடன் ரூ.75 ஆயிரமும், 3-வது இடத்தை பெற்ற கர்நாடகா அணிக்கு ஓம்சக்தி கோப்பையுடன் ரூ.50 ஆயிரமும், 4-வது இடத்தை பிடித்த ஐ.சி.எப். அணிக்கு டி.எம்.பி. கோப்பையுடன் ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது. இது தவிர சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட பாரத் (கர்நாடகா), சாமிநாதன் (தமிழ்நாடு போலீஸ்), ஹரிகரன் (எஸ்.ஆர்.எம்.), அங்கமுத்து (ஐ.சி.எப்.), மிதுன்குமார் (செயின்ட் ஜோசப்ஸ்) ஆகியோர் தலா ரூ.5 ஆயிரம் பரிசாக பெற்றனர்.

விழாவில், ரோமா குரூப் நிர்வாக இயக்குனர் ராஜன், டாக்டர் ஜி.டி.போஸ் நினைவு மருத்துவமனை இயக்குனர் அஜித் போஸ், சென்னை வருமானவரித்துறை இணை ஆணையர் பாண்டியன், சுங்கத்துறை உதவி ஆணையர் ஜோஸ் வர்கீஸ், காஸ்கோ மார்க்கெட்டிங் நிர்வாகி உபைதுர் ரகுமான், போட்டி அமைப்பு குழு செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், சென்னை ஒய்.எம்.சி.ஏ. செயலாளர் ஆசிர்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story