துப்பாக்கி சுடுதலில் ஜிதுராய் தங்கம் வென்று சாதனை


துப்பாக்கி சுடுதலில் ஜிதுராய் தங்கம் வென்று சாதனை
x
தினத்தந்தி 9 April 2018 10:30 PM GMT (Updated: 9 April 2018 7:30 PM GMT)

காமன்வெல்த் விளையாட்டு போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஜிதுராய் தங்கப்பதக்கம் வென்றதுடன் புதிய போட்டி சாதனையும் படைத்தார்.

கோல்டுகோஸ்ட்,

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது.

இந்த போட்டியின் 5-வது நாளான நேற்று நடந்த துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் போட்டியில் இந்திய வீரர் ஜிதுராய் 235.1 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அத்துடன் அவர் காமன்வெல்த் விளையாட்டு போட்டி சாதனையையும் படைத்தார். காமன்வெல்த் விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

இந்த பிரிவில் மற்றொரு இந்திய வீரர் ஓம்பிரகாஷ் மிதர்வால் 214.3 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் பெற்றார். ஆஸ்திரேலிய வீரர் கெர்ரி பெல் 233.5 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

தங்கப்பதக்கம் வென்ற 30 வயதான ஜிதுராய் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். நேபாளத்தில் பிறந்த ஜிதுராய் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவர் ஆவார். 2014-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஜிதுராய் 50 மீட்டர் ஏர்பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்று இருந்தார்.

துப்பாக்கி சுடுதலில் இந்தியா நேற்று மேலும் 2 பதக்கம் வென்றது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை மார்ட்டினா லிண்ட்சே, இந்திய வீராங்கனை மெகுலி கோஷ் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் 247.2 புள்ளிகள் குவித்து சமநிலை வகித்தனர்.

இதனால் வெற்றியாளரை முடிவு செய்ய நடத்தப்பட்ட ஷூட்-ஆப் சுற்றில் 10.3 புள்ளிகள் பெற்ற மார்ட்டினா லிண்ட்சே தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த 17 வயதான மெகுலி கோஷ் 9.9 புள்ளி பெற்றதால் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியது ஆனது. நடப்பு சாம்பியனான இந்திய வீராங்கனை அபுர்வி சண்டிலா 225.3 புள்ளிகளும் வெண்கலப்பதக்கம் பெற்றார். 23 வயதான அபுர்வி சண்டிலா ஜெய்ப்பூரை சேர்ந்தவர் ஆவார்.

பளுதூக்குதல் போட்டியில் ஆண்களுக்கான 105 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் பர்தீப்சிங் மொத்தம் 352 கிலோ எடை தூக்கி (ஸ்னாட்ச்-152 கிலோ, ‘கிளன் மற்றும் ஜெர்க்’-200 கிலோ) வெள்ளிப்பதக்கம் வென்றார். சமோவ் நாட்டு வீரர் சானாலெ மாவ் மொத்தம் 360 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கமும், இங்கிலாந்து வீரர் ஓவென் மொத்தம் 351 கிலோ எடை தூக்கி வெண்கலப்பதக்கமும் பெற்றனர். பளுதூக்குதல் போட்டியில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்கள் வென்று முதலிடத்தை பிடித்துள்ளது.

பஞ்சாப்பை சேர்ந்த 23 வயதான பர்தீப்சிங் அளித்த பேட்டியில், ‘கிளன் மற்றும் ஜெர்க்’ பிரிவில் நான் முன்பு 215 கிலோ வரை தூக்கி இருக்கிறேன். ஆனால் இன்று என்னுடைய நாளாக அமையவில்லை. தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் அளித்தாலும், வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் கைப்பற்றியது. நேற்றைய போட்டிகள் முடிவில் பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா 39 தங்கம், 33 வெள்ளி, 34 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 22 தங்கம், 25 வெள்ளி, 16 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடத்திலும், இந்தியா 10 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன.

Next Story