காமன்வெல்த் விளையாட்டு போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாசி சிங் தங்கம் வென்றார்


காமன்வெல்த் விளையாட்டு போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாசி சிங் தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 11 April 2018 9:00 PM GMT (Updated: 11 April 2018 8:21 PM GMT)

காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாசி சிங் தங்கப்பதக்கம் வென்றார். குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை மேரிகோம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

கோல்டுகோஸ்ட், 

காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாசி சிங் தங்கப்பதக்கம் வென்றார். குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை மேரிகோம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

காமன்வெல்த் விளையாட்டு

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது.

இதில் 7-வது நாளான நேற்று நடந்த துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான ‘டபுள் டிராப்’ பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாசி சிங், ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மா கோஸ் ஆகியோர் இறுதிப்போட்டியில் தலா 96 புள்ளிகள் குவித்து சமநிலை வகித்தனர்.

தங்கம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்க நடந்த ‘ஷூட்-ஆப்’ சுற்றில் ஸ்ரேயாசி சிங் மேலும் 2 புள்ளி சேர்த்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மா கோஸ் மேலும் ஒரு புள்ளி பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றார். ஸ்காட்லாந்து வீராங்கனை லின்டா பியர்சன் 87 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். 86 புள்ளிகள் குவித்த மற்றொரு இந்திய வீராங்கனை வர்ஷா வர்மன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

டெல்லியில் பிறந்தவரான ஸ்ரேயாசி சிங் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். 2014-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் ‘டபுள் டிராப்’ பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். ஸ்ரேயாசிங்கின் தந்தை திக்விஜய்சிங் இந்திய துப்பாக்கி சுடுவோர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். துப்பாக்கி சுடுதலில் இந்தியா பெற்ற 4-வது தங்கப்பதக்கம் இது. ஒட்டுமொத்தத்தில் இந்தியாவுக்கு கிட்டிய 12-வது தங்கம் இதுவாகும்.

மைல்கல் பதக்கம்

தங்கமங்கை ஸ்ரேயாசி சிங் அளித்த பேட்டியில், ‘இந்த பதக்கம் எனது வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாகும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் பந்தயம் கிடையாது. இந்த போட்டியில் எனது செயல்பாடு மிகவும் சிறப்பாக அமைந்தது’ என்றார்.

ஆண்களுக்கான டபுள் டிராப் பிரிவில் இந்திய வீரர் அன்குர் மிட்டல் இறுதிப்போட்டியில் 53 புள்ளிகள் சேர்த்து வெண்கலப்பதக்கம் பெற்றார். ஸ்காட்லாந்து வீரர் டேவிட் மெக்மாத் 74 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள மனித தீவை சேர்ந்த வீரர் டிம் நீலே 70 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

ஓம்பிரகாஷ் மிதர்வாலுக்கு வெண்கலம்

ஆண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் ரீபாசோலி இறுதிப்போட்டியில் 227.2 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். வங்காளதேச வீரர் ஷகில் அகமது 220.5 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், இந்திய வீரர் ஓம்பிரகாஷ் மிதர்வால் 201.1 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். முன்னணி இந்திய வீரர் ஜிதுராய் 8-வது இடமே பிடித்தார்.

ஓம்பிரகாஷ் மிதர்வால் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் போட்டியில் ஏற்கனவே வெண்கலம் வென்று இருந்தார். அந்த போட்டியில் இந்திய வீரர் ஜிதுராய் தங்கம் வென்று இருந்தது நினைவிருக்கலாம்.

மேரிகோம் முன்னேற்றம்

குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரிகோம் அரைஇறுதியில் 5-0 என்ற கணக்கில் இலங்கை வீராங்கனை அனுஷா தில்ருக்‌ஷியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கத்தை உறுதிப்படுத்தினார். 60 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை சரிதாசிங் கால்இறுதியில் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். 51 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை பிங்கி ராணியும் கால்இறுதியுடன் நடையை கட்டினார்.

ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் கவுரவ் சோலங்கி (52 கிலோ பிரிவு), மனிஷ் கவுசிக் (60 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ) ஆகியோர் தங்களது கால்இறுதி சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர்.

அரைஇறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா

ஆக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஏற்கனவே அரைஇறுதிக்கு முன்னேறி விட்ட இந்திய அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது. இந்திய அணி தரப்பில் மன்பிரீத்சிங், ரூபிந்தர் பால்சிங், வருண்குமார், மன்தீப்சிங் தலா ஒரு கோல் அடித்தனர். நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

பெண்கள் பிரிவில் இன்று நடைபெறும் அரைஇறுதிப்போட்டியில் இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவை (மாலை 4.45 மணி) எதிர்கொள்கிறது.

சாய்னா, சிந்து வெற்றி

தடகள போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இறுதிசுற்றை எட்டியிருந்த இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் (51.32 வினாடி) 6-வது இடமே பிடித்தார். ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் தேஜஸ்வன் சங்கர் (2.24 மீட்டர்) 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் தங்களது 2-வது சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, ருத்விகா காதே ஆகியோர் வெற்றி கண்டனர். டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் சரத் கமல், ஹர்மீத் தேசாய், சத்யன் ஆகியோர் தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் மதுரிகா பத்கர், மவுமா தாஸ் ஆகியோர் வெற்றியை தனதாக்கினார்கள்.

ஆஸ்திரேலியா முன்னிலை

நேற்றைய போட்டிகள் முடிவில் பதக்கபட்டியலில் ஆஸ்திரேலியா 57 தங்கம், 43 வெள்ளி, 45 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடமும், இங்கிலாந்து 25 தங்கம், 30 வெள்ளி, 21 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடமும், இந்தியா 12 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கத்துடன் 3-வது இடமும் வகிக்கின்றன.

Next Story